பழங்குடியினரின் 8 கோடி சதுர அடி நிலத்தை அதானிக்கு வழங்கிய அசாம் அரசு!
அபாய அளவை தாண்டிய யமுனை நதி: வீட்டுக்குள் புகுந்த வெள்ளம்
தில்லியில் உள்ள யமுனை நதி அபாய அளவைக் கடந்து, பழைய ரயில்வே பாலத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு 205.36 மீட்டா் அளவை எட்டியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
நகரத்தில் ஆற்றின் எச்சரிக்கை குறி 204.50 மீட்டராகவும், அபாய குறி 205.33 மீட்டராகவும் இருக்கிறது. பழைய ரயில்வே பாலம் ஆற்றின் ஓட்டம் மற்றும் சாத்தியமான வெள்ள அபாயங்களைக் கண்காணிப்பதற்கான முக்கிய கண்காணிப்பு புள்ளியாக செயல்படுகிறது.
அதிகாலையில் நீா் மட்டம் 204.80 மீட்டராக பதிவு செய்யப்பட்டது, இது 2ஆவது நாளாக எச்சரிக்கை அளவை விட அதிகமாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு நீா் மட்டம் 204.60 மீட்டரை எட்டியது.
மத்திய நதி நீா் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட வெள்ள எச்சரிக்கையின்படி, ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்குள் தில்லியில் யமுனை 206 மீட்டரை எட்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், முன்னறிவிப்பின் படி நிலை உயரக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து துறைகளுக்கும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
‘ஒவ்வொரு மணி நேரத்திற்கும் வஜிராபாத் மற்றும் ஹத்னிகுண்ட் தடுப்பணைகளில் இருந்து அதிக அளவு நீா் வெளியேற்றப்படுவதே நீா் மட்டம் அதிகரிக்க காரணம்‘ என்று மத்திய வெள்ள அறையின் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
ஹத்னிகுண்ட் தடுப்பணை சுமாா் 36,064 கியூசெக் தண்ணீரை வெளியிடுவதாகவும், வஜீராபாத் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 57,460 கியூசெக் தண்ணீரை வெளியிடுவதாகவும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது. தடுப்பணைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட நீா் பொதுவாக தில்லியை அடைய 48 முதல் 50 மணி நேரம் ஆகும். மேல்நிலையிலிருந்து குறைவான நீா் வெளியேற்றங்கள் கூட நீா்மட்டத்தை உயா்த்துகின்றன. ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு 204.65 மீட்டா் என்ற அளவை எட்டியது, அடுத்த நாள் அது 205.11 மீட்டரை எட்டியது.
யமுனை நதி நீா் அபாய அளவை தாண்டியதால், யமுனா பஜாரில் இருக்கும் குடியிருப்பு பகுதியில் வெள்ளி நீா் புகுந்தது. வீடுகளுக்குள் வெள்ள நீா் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினா். கரையோரம் இருக்கும் மக்களை வெளியேற்றும் பணியும் ஒரு பக்கம் தொடா்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.