இந்தியாவின் எரிசக்தி துறையில் எண்ணற்ற வாய்ப்புகள்- முதலீட்டாளா்களுக்கு பிரதமா் ம...
`அப்செட்’ செங்கோட்டையன் - 8 ஆண்டுகள் அமைதிக்குப்பின் எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி
மெளனத்தை கலைத்த செங்கோட்டையன்
அ.தி.மு.க-வை வழிக்கு கொண்டுவர, பா.ஜ.க எத்தனையோ வழிமுறைகளை கையாண்டுக் கொண்டேதான் இருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் இன்னமும் விடாமல் துரத்துகிறது. தொடர்ச்சியான ரெய்டு அஸ்திரங்களை ஏவிய பா.ஜ.க-வுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, "என்னை யாரும் அடிமைப்படுத்த முடியாது." என்று அத்திகடவு அவிநாசி திட்ட நிகழ்ச்சியில் ஆவேசமாக பேசியிருந்தார் எடப்பாடி.
ஆனால், அதே நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்கள் இடம் பெறவில்லை' என்று மோஸ்ட் சீனியர் நிர்வாகியான செங்கோட்டையன் அதிருப்தியை கிளப்பி இருக்கிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கிட்டதட்ட 8 ஆண்டுகளாக அமைதியாக இருந்த செங்கோட்டையன் முதல்முறையாக தனது மெளனத்தை உடைத்திருப்பது அதிமுகவுக்குள் கலகமாகியிருக்கிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-11/1dvw64hw/GjaFrYTaYAAjD31.jpg)
அத்திக்கடவு - அவிநாசி பாசனத் திட்டம் என்பது கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் கால் நூற்றாண்டு கோரிக்கை. இந்த திட்டத்தை நிறைவேற்றியதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திட்டம் ஒருங்கிணைப்பு குழு சார்பில் பாராட்டு விழா ஒன்று பிப்ரவரி 9-ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக அழைப்பிதழில், எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் மட்டும் அச்சடிக்கப்பட்டதோடு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பெயர் வேலுமணிக்கு பிறகு போடப்பட்டிருந்தது.
`செங்கோட்டையனின் திடீர் அதிருப்தி?’
இந்நிலையில் கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள கஞ்சப்பள்ளி பிரிவு பகுதியில் நடந்த நிகழ்ச்சியை புறக்கணித்த செங்கோட்டையன், " என்னை வளர்த்து ஆளாக்கிய எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களின் படங்கள் வைக்கப்படாததால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை." என்று விளக்கம் கொடுத்து பகீரை கிளப்பி இருக்கிறார்.
செங்கோட்டையனின் திடீர் அதிருப்தி குறித்து அதிமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.
"பொதுச் செயலாளர் எடப்பாடிமீது செங்கோட்டையனுக்கு பர்ஸ்னலாக சில கோபங்களும் அதிருப்திகள் இருக்கதான் செய்கிறது. எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அ.தி.மு.க-வில் மிக முக்கியமான இடத்தில் இருக்கிறார் செங்கோட்டையன். எம்.ஜி.ஆர்., அம்மா தலைமையிலான ஆட்சியில், அமைச்சராக இருந்தவர், வேட்பாளர் தேர்வு, தேர்தல் பயண திட்டம், தேர்தல் வாக்குறுதி உருவாக்குவதில் முக்கியமான இடத்தில் இருந்தார் செங்கோட்டையன்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-11/llyc5qhy/82187_thumb.jpg)
அம்மா மறைவுக்கு பிறகு முதல்வர் ரேஸில் இருந்த செங்கோட்டையன், எடப்பாடி முதல்வரானதில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறார். தான் முதல்முறை அமைச்சராக இருந்தபோது கிளைக்கழகத்தில்கூட பொறுப்பில் இல்லாத எடப்பாடி, தன்னை ஓரம்கட்டியதை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
இருப்பினும், கட்சி நலனுக்காக அனைத்தையும் பொறுமையாக கடந்துக் கொண்டேதான் இருந்தார். ஆனால், விலகி செல்பவர்களை சீண்டுவதுபோல, கட்சியின் முக்கிய பணிகளில் இருந்து அவரை தலைமை முற்றிலுமாக ஓரம்கட்டிவிட்டது. உதாரணமாக, அமைப்பு செயலாளர் என்ற பவர் இல்லாத போஸ்டிங்கை தவிர, மாநில அளவில் தலைமைக் கழகத்தில் அதிகாரமிக்க பதவி அவருக்கு வழங்கப்படவில்லை. நடந்த முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட கட்சியின் முக்கிய பணிகளுக்கான ஆலோசனை குழுவிலும் அவருக்கு பொறுப்பு வழங்கப்படவில்லை.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-12-17/hex26z8c/6761b0f6996ce.jpg)
அதேநேரத்தில் அ.தி.மு.க-வின் தொடர் தோல்விக்கு எடப்பாடியின் பிடிவாதமும் முக்கிய காரணமென்று செங்கோட்டையன் திடமாக நம்புகிறார். கட்சி நலன் சார்ந்த விஷயங்களை, தனது பர்ஸ்னல் ஈகோவாக எடப்பாடி எடுத்து கொள்கிறார் என்று செங்கோட்டையன் எப்போதுமே கட்சியினருடான ஆலோசனை கூட்டத்தில் சொல்வதுண்டு என்கிறார்கள். அதனால், எடப்பாடியை மனமாற்ற தனது தலைமையில் குழு ஒன்றை உருவாக்கினார். அதன்படி, செங்கோட்டையன் தலைமையில் முன்னாள் அமைச்சர்களான நத்தம் விசுவநாதன், கே.பி. அன்பழகன், வேலுமணி, சி.வி.சண்முகம், தங்கமணி ஆகியோர் 2024 ஜூலை மாதம், சேலத்தில் வைத்து எடப்பாடியுடன் ஆலோசனை நடத்தினர்.
ஆனால், அதன்பின்னர் செங்கோட்டையன் மீதான, எடப்பாடியின் பார்வை முற்றிலுமாக மாறியது. குறிப்பாக, நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்து அமைக்கப்பட்ட கள ஆய்வு குழுவிலும் அவருக்கு இடம் கொடுக்கப்படவில்லை. அவரது ஈரோடு மாவட்டத்தில் கள ஆய்வாளராக வேலுமணியை நியமித்து, தலைமை அவரை கடும் அப்செட்டாக்கியது. இதை மனதில் வைத்துக் கொண்டே இருந்த செங்கோட்டையன், தனக்கு நெருக்கமான சிலரிடம் பேசியிருக்கிறார். அன்று நடந்த அந்த ஆறுபேர் ஆலோசனை கூட்டத்தில், " நாம் இருக்கும்போது கட்சி அழிந்ததாக இருக்கக்கூடாது" என்று அட்வெஸ் செய்த, செங்கோட்டையன் இப்போது இந்தளவுக்கு ஓபனாக பேசுகிறாரென்றால், அந்தளவுக்கு அவரை இழிவு செய்திருகிறது தலைமை. " என்றனர் விரிவாக.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-07/rexahlfm/67a65b7fc6a86.jpg)
`காலம் அப்படிதான் மாறும்’
தொடர்ந்து பேசிய அமைப்பு செயலாளர்கள் சிலர், " ஒரு காலத்தில் கொங்குவின் முகமாக அவர் இருந்திருக்கலாம். இப்போது எடப்பாடி இருக்கிறார். காலம் அப்படிதான் மாறும். கட்சியில் இருந்து செங்கோட்டையனை யாரும் ஓரம் கட்டவில்லை. அவரே தற்போதைய நிர்வாகிகளுடன் ஈடுகொடுத்து ஓடமுடியாமல் தன்னை தனிமை படுத்திக் கொண்டார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஈரோடு தொகுதியில் அதிமுகவுக்கு வெற்றி முகமிருந்தது. அதேபோல, இந்த இடைத்தேர்தலிலும் செங்கோட்டையன் நினைத்திருந்தால் போட்டிபோட்டு இருக்கலாம். ஆனால், கட்சி வேலை எதையுமே செய்யாமல் எல்லா மரியாதையும் கிடைக்கவேண்டுமென்றால் எப்படி? ஆனாலும், சில முக்கிய விவகாரங்களில் அவரை ஆலோசித்துதான் தலைமை முடிவெடுக்கிறது. எல்லா நேரமும் அவர் பின்னாலேயே ஓடமுடியதல்லவா? இந்த யதார்த்ததை அவர் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் நாங்கள் நினைக்கிறோம். கிட்டதட்ட ஓ.பி.எஸ் மனநிலையில்தான் செங்கோட்டையனும் இருக்கிறார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2019-05/7608bf46-9443-4142-a8cd-592815b97ef4/127786_thumb.jpg)
தான் பேசவேண்டிய இடத்தில் எல்லாம் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது பேசி சர்ச்சை ஏற்படுத்திவிட்டார் செங்கோட்டையன். அவரின் பின்னணியில் டெல்லி இருப்பதாகவே தலைமை நினைக்கிறது. ஏனென்றால், எடப்பாடிக்கு இணையாக கொங்குவில் செல்வாக்கு இருப்பது செங்கோட்டையனுக்குதான். ஓ.பி.எஸ்-ஸால் கட்சிக்குள் வாங்கு வங்கியை சிதைக்க முடியவில்லை. ஆனால், இ.பி.எஸ் செங்கோட்டையனுக்கு இடையே நேரடியாக பிரச்னை எழுந்தால், அ.தி.மு.க-வின் கொங்கு ஓட்டு வங்கி நிச்சயமாக சிதைக்கப்படும். எனவேதான், அவருக்கு ஏதோ ஆசைக்காட்டி, களத்தில் இறக்கிவிட்டிருக்கிறது பா.ஜ.க. அதேநேரத்தில், அதிமுக-வுக்குள் செங்கோட்டையனை சமாதானம் செய்ய முயற்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. " என்றனர் சூசகத்தோடு.
இதுதான் ஆரம்பம்..!
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play