நாளை(செப். 7) சென்னை - கும்மிடிப்பூண்டி இடையே 11 ரயில்கள் ரத்து!
அமமுக: "அண்ணாமலை இருந்தவரை கூட்டணியில் எந்தச் சிக்கலும் இல்லை"- TTV தினகரன் சொல்வது என்ன?
கடந்த மாதம் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் என்.டி.ஏ கூட்டணியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் சில தினங்களுக்கு முன்பாக என்.டி.ஏ கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணியிலிருந்தவர்கள் அடுத்தடுத்து வெளியேறியது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இந்த முடிவினை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என பா.ஜ.க தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகிறது.

இதற்கிடையில் அ.தி.மு.க மூத்த தலைவர் செங்கோட்டையன், ``அ.தி.மு.க-விலிருந்து பிரிந்தவர்களை இணைக்க வேண்டும். அப்படி இணைக்கவில்லை என்றால், மீண்டும் ஆட்சிக்கு வருவது கடினம்.
10 நாட்களில் அதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும்" என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குக் கெடு விதித்திருந்தார்.
6 மாதங்களாக எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியிலிருந்த செங்கோட்டையன், திடீரென அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டும் என்று பேசி இருப்பது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
செங்கோட்டையனின் இந்தக் கருத்துக்கு ஓ.பி.எஸ், சசிகலா ஆதரவு தெரிவித்தனர். ஆனால் டி.டி.வி தினகரன் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், இன்று காலை மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், ``நேற்று என்னிடம் நிரூபர் கேட்ட கேள்விக்கு நாளை பதில் சொல்கிறேன் என்றேன். அதை பிரேக்கிங் ஆக்கியிருக்கிறீர்கள்...
எங்களுடையது சாதாரண கட்சி. 2% வாக்கு மட்டுமே இருக்கக்கூடிய ஒரு சின்ன கட்சி. ஆர்.கே. நகர் தேர்தலுக்குப் பிறகு நாங்கள் எந்தத் தேர்தலிலும் வெல்லவில்லை. என்றெல்லாம் விமர்சகர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் 2024-ல் மோடி இந்தியப் பிரதமராக வேண்டும் என என்.டி.ஏ கூட்டணியில் அண்ணாமலையோடு சேர்ந்து செயல்பட்டோம். நாடாளுமன்றத் தேர்தல் வேறு, சட்டமன்றத் தேர்தல் வேறு.
அ.ம.மு.க-வின் கூட்டணி முடிவை டிசம்பர் மாதத்தில் கூறுவோம். 2006-ல் விஜயகாந்த் எப்படி தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தினாரோ அதுபோல 2026 தேர்தலில் விஜய்யின் தாக்கம் இருக்கும் என்றுதானே கூறினேன்.
அதற்குள் நான் அவருடன் இணையப்போகிறேன் என்றெல்லாம் செய்திகள் வரத் தொடங்கிவிட்டன. ஆனால், அது செய்தியாளர் கேட்ட கேள்விக்கு என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே.
நாங்கள் கட்சியை வியாபாரமாகப் பார்க்கவில்லை. அ.தி.மு.க தொண்டர்கள் ஓரணியில் இணைய வேண்டும் என அமித்ஷா விரும்புகிறார். அதற்காக முயல்கிறார்.
அந்த முடிவில் எனக்கும் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அதன் அடிப்படையில் அவர்கள் (அதிமுக-பாஜக) ஒன்றாகிவிட்டார்கள். ஆனால், இந்தக் கட்சி யாரை எதிர்த்துத் தொடங்கப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும்.
அதை கூட்டணித் தலைமை புரிந்துகொள்ளும் எனக் காத்திருந்தோம். அவசரமாக நாங்கள் எந்த முடிவையும் எடுக்கவில்லை. நிதானமாக யோசித்தோம். அதன் பிறகே கூட்டணியிலிருந்து விலகினோம்.

பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா வந்தபோதுகூட நாங்கள் அவர்களைச் சந்திக்கவில்லை எனக் கூறுகிறார்கள். அவசியமில்லாமல் யாரையும் சந்திக்க வேண்டியதில்லை. ஒருவேளை சந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் சந்திப்போம்.
விளம்பரத்திற்காக ஒருவரை வரவேற்பதை நாங்கள் விரும்பமாட்டோம். எதையும் மறைத்துப் பேசவேண்டிய அவசியமில்லை.
அண்ணாமலை இருந்தவரை கூட்டணியில் எந்தச் சிக்கலும் இல்லை. நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்லத் தெரியவில்லை.
ஓ.பி.எஸ் முதல்வரைச் சந்தித்ததுகூட சம்பிரதாயமானது. அதற்கும் அரசியல் முடிச்சுப் போட்டுவிட்டீர்கள். அம்மா மீது இருக்கும் மரியாதையைப் போல எனக்கு மூப்பனார் மீதும் மரியாதை உண்டு.
அவர் நினைவு தினத்தன்று வாசனுக்கு வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பியிருந்தேன். அதன்பிறகுதான் யார், யார் வருகிறார்கள் என்பது தெரிந்தது. எனக்கு அதிமுக தலைவர்கள், தொண்டர்களுடன் எந்தக் கோபமோ, முரண்பாடுகளோ இல்லை.
எங்களுக்கு ஒரே ஒருவர் மீது மட்டும்தான் பிரச்னை. இதை அதிமுக தொண்டர்கள், பிற தலைவர்கள் உணர்வார்கள் எனக் கருதுகிறேன். அப்படி அவர்கள் உணர்ந்தால் மட்டுமே அ.தி.மு.க ஆட்சி அமைக்க முடியும்.

இப்போதுகூட நாங்கள் இதை வெளியே பேசுவதற்குக் காரணம், சில அவதூறுகளை ஊர் ஊராகச் சென்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு மேலும் மௌனமாக இருக்கக் கூடாது என்றே பேசுகிறோம்.
2026-ல் நிச்சயம் ஆட்சி அமைக்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம். ஆனால் அந்த முடிவை டிசம்பர் மாதம்தான் தெரிவிப்போம். செங்கோட்டையன் எங்கள் ஸ்லீப்பர் செல் அல்ல.
ஒவ்வொரு தலைவருக்கும் அவர்கள் உணர்ந்துகொள்வதற்கான காலம் தேவைப்படும். இப்போது செங்கோட்டையன் உணர்ந்திருக்கிறார். ஆனால் அவர் கூறிய கருத்துக்கு அவரிடம்தான் நீங்கள் விளக்கம் கேட்ட வேண்டும்" எனப் பேசினார்.