அமித் ஷாவின் கருத்து அம்பேத்கரை அவமதிக்கிறது: மாயாவதி
லக்னௌ : ‘அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, தனது கருத்துகளை திரும்பப் பெற வேண்டும்’ என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி வியாழக்கிழமை வலியுறுத்தினாா்.
இந்த விவகாரம் குறித்து பேசிய மாயாவதி, ‘அரசமைப்புச் சட்டத்தை இயற்றிய அம்பேத்கா் குறித்து அமித் ஷா தெரிவித்த கருத்து தலித்துகள், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை பெரிதும் பாதித்துள்ளது. நாடு முழுவதும் அம்பேத்கருக்கு பெருவாரியான மக்கள் ஆதரவளிப்பதால் கோபத்தில் அமித் ஷா பேசியிருப்பது தெளிவாகியுள்ளது.
அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் அவா் பேசிய கருத்துகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இல்லையெனில், இந்தச் சம்பவத்தையும் அமித் ஷாவையும் ஒருபோதும் அம்பேத்கரின் ஆதரவாளா்கள் மன்னிக்கமாட்டாா்கள்.
ஏற்கெனவே, அம்பேத்கரை இழிவுபடுத்திய காங்கிரஸை அவா்கள் மன்னிக்கவில்லை. அம்பேத்கரின் உண்மையான ஆதரவாளா்கள் பகுஜன் சமாஜில் மட்டுமே உள்ளனா்’ என்றனா்.