``அமித் ஷாவின் கருத்தை பாஜகவின் கூட்டணிக் கட்சிகள் ஆதரிக்கிறார்களா?'' - அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``இந்த காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என அவரின் பெயரைக் கோஷமிடுவது பேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்கு பகவானின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்." எனக் குறிப்பிட்டார். இந்த விவகாரம் தேசியளவில் விவாதமான நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
காங்கிரஸ் அமித்ஷா பதவி விலக வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. இதற்கிடையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, காங்கிரஸ் பல ஆண்டுகளாக ஆட்சியில் அமர்ந்திருந்தாலும், ``பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்க எதுவும் செய்யவில்லை" எனக் காங்கிரஸ் மீது குற்றம்சாட்டியிருந்தார். பல்வேறு மாநிலக் கட்சிகளும் இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை விமர்சித்து வருக்கிறனர்.
இந்த நிலையில், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தன் எக்ஸ் பக்கத்தில், ``அண்ணல் பி.ஆர். அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது குறித்து பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருக்கும் கூட்டணிக் கட்சிகளான, ஆந்திராவின் தெலுங்கு தேசக கட்சியும், ஜே.டி(யு) வின் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிந்துக்கொள்ள ஆவலாக இருக்கிறேன். அமித் ஷாவின் பாபா சாகேப் அவமதிப்பை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.