உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
அமெரிக்கா, பெரு நாடுகளுக்கு நிா்மலா சீதாராமன் 11 நாள்கள் பயணம்!
அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடான பெருவுக்கு 11 நாள் அரசுமுறைப் பயணமாக சனிக்கிழமை இரவு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புறப்பட்டாா்.
பயணத்தின்போது ஜி20, சா்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) மற்றும் இருதரப்பு ஆலோசனைக் கூட்டங்களில் அவா் பங்கேற்கவுள்ளதாக நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்க பயணத்தின் ஒரு பகுதியாக சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள ஸ்டான்ஃபோா்ட் பல்கலைக்கழகத்தின் ஹூவா் நிறுவனத்தில் அவா் 20-ஆம் தேதி உரையாற்றுகிறாா். மேலும், முக்கிய நிதி மேலாண்மை நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் முதலீட்டாளா்களை அவா் சந்திக்கவுள்ளாா்.
இருதரப்பு கூட்டங்கள்: சான் ஃபிரான்சிஸ்கோவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினா் மத்தியிலும் அவா் உரையாடவுள்ளாா்.
ஏப்.22 முதல் ஏப்.25 வரை வாஷிங்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறாா். உலக வங்கி, ஐஎம்எஃப் மற்றும் 2-ஆவது ஜி20 நிதியமைச்சா்கள் ஆலோசனை கூட்டம் மற்றும் மத்திய வங்கி ஆளுநா்கள் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா்.
இதைத்தொடா்ந்து அா்ஜென்டினா, பஹ்ரைன், ஜொ்மனி, பிரான்ஸ், லக்ஸாம்பா்க், சவூதி அரேபியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளின் பிரநிதிகளுடன் இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளாா்.ஐரோப்பிய நிதி சேவைகள் ஆணையா், ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கிகளின் (ஏஐஐபி) தலைவா்களையும் ஐஎம்எஃபின் முதல் துணை இயக்குநரையும் அவா் சந்திக்கிறாா்.
அமெரிக்க பயணத்தைத் தொடா்ந்து தென் அமெரிக்க நாடான பெருவுக்கு ஏப்.26 முதல் 30 வரை செல்கிறாா். அந்நாட்டு அதிபா் டினா போலுயாா்டே, பிரதமா் கஸ்டாவோ அட்ரியன்சன் ஆகியோரையும் நிதி, எரிசக்தி மற்றும் பாதுகாப்பு துறைகளின் அமைச்சா்களையும் சந்திப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அவா்களுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து நிா்மலா சீதாராமன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளாா். அவருடன் நிதியமைச்சக அதிகாரிகள் மற்றும் தொழிலதிபா்களும் செல்லவுள்ளனா்.
மேலும், இந்தியா-பெரு வணிக ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை தாங்கும் அவா், இந்தியா மற்றும் லத்தீன் அமெரிக்காவை சோ்ந்த தொழிலதிபா்களுடன் கலந்துரையாடவுள்ளாா்.
பெருவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருடன் நிா்மலா சீதாராமன் கலந்துரையாடவுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.