அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரினா சபலென்கா மீண்டும் சாம்பியன்!
அமெரிக்க ஓபன் டென்னிஸின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவை வீழ்த்தி உலகின் நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலென்கா மீண்டும் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.
நடப்பு டென்னிஸ் காலண்டரின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனில், மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்று அமெரிக்காவில் நடைபெற்று வந்தது.
இந்தத் தொடரில், நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா மற்றும் அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா ஆகியோர் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்தினர்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் ஆர்தர் ஆஷ்லே திடலில் நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரஸின் சபலென்காவும், அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவாவும் கடுமையாக மோதினர்.

சுமார் ஒரு மணி நேரம் 34 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் 6-3 என்ற கணக்கில் முதல் செட்டின் சபலென்கா முன்னிலை பெற்றார். அதனைத் தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டில் 5-5 என்ற கணக்கில் சமனிலை பெற்றார் அனிசிமோவா.
இதனால், இரண்டாவது செட் இறுதியில் டை-பிரேக்கருக்குச் சென்றது. இருப்பினும், உலகின் நம்பர் 1 வீராகனை என்பதை மீண்டும் நிரூபித்த சபலென்கா, 7-6 (3) என்ற கணக்கில் வென்று அமெரிக்க ஓபன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.
2014 ஆம் ஆண்டு செரீனா வில்லியம்ஸுக்குப் பிறகு அமெரிக்க ஓபன் பட்டத்தை வெற்றிகரமாக தக்கவைத்த முதல் பெண் பெருமையையும் சபலென்கா பெற்றுள்ளார்.

இந்தாண்டு துவக்கத்தில் விம்பிள்டனில் இகா ஸ்வியாடெக்கிடம் தோல்வியைத் தழுவிய அனிசிமோவா, மீண்டும் ஒரு இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளார்.
அமெரிக்க ஓபன் கோப்பை சபலென்காவுக்கு நான்காவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். கிம் கிளிஸ்டர்ஸ், அரான்ட்சா சான்செஸ் விகாரியோ, நவோமி ஒசாகா மற்றும் ஹனா மண்டிகோவா ஆகியோருடன் இந்தச் சாதனையை சமன் செய்துள்ளார் சபலென்கா.