போக்குவரத்து தொழிலாளா்களின் ஊதிய ஒப்பந்தத்தை பேசி முடிக்க கோரி ஆா்ப்பாட்டம்
`அமைச்சர் வருகை' கெடுபிடியால் வைகையில் தூய்மைப்பணி நிறுத்தம் - குமுறும் மக்கள்.. நடந்தது என்ன?
`நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை' பல கோடி ரூபாய் செலவு செய்து, இரண்டு ஆண்டுகளாக வைகை ஆற்றை தூய்மைப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் காவல்துறையினர், அமைச்சர்கள் வரும்போது இப்படி வேலை செய்யகூடாது என்று தடுத்து நிறுத்தி பணி செய்பவர்களை அவமானப்படுத்தி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அத்துடன் தூய்மை பணியும் நிறுத்தி விட்டதாக அவர்கள் கூறியது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை
மதுரையைச் சேர்ந்த குருசாமி என்பவர் தன்னுடைய நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை மூலம் அரசு மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு தினமும் உணவு வழங்குவது, பெண்கள், ஆதரவற்றோர், மூன்றாம் பாலினத்தவருக்கு, ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுவது என பல்வேறு சமூகப் பணிகளைச் செய்வதுடன் மோசமான நிலையிலுள்ள மதுரை வைகை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணியை கடந்த 2 ஆண்டுகளாக செய்து வருகிறார்.
பொதுப்பணித்துறையினரின் அனுமதி பெற்று ஆரப்பாளையம் முதல் ஓபுளாபடித்துறை வரையுள்ள வைகை ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயதாமரை செடிகளையும் குப்பைகளையும் அகற்ற பணியாளர்களை நியமித்து பணியாற்றி வருகிறார்.
அது மட்டுமின்றி 500 கண்காணிப்பு கேமிராக்களை அமைத்து வைகை ஆற்றில் குப்பை போடுவதை தடுத்து வருகிறார். அவரின் இந்த செயல்பாடுகளை மதுரையிலுள்ள அரசுத்துறையினரும் பல்வேறு அமைப்பினரும் பாராட்டி வருகிறார்கள்.

சித்திரை திருவிழா முன்னேற்பாடு
இந்நிலையில், சித்திரை திருவிழாவின் முன்னேற்பாடுகளை பார்வையிட அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு, பி.மூர்த்தி, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் நேற்று ஆழ்வார்புரம் பகுதியில் ஆய்வு மேற்கொள்ள வந்தனர்.
அப்போது, நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளையைச் சேர்ந்த பணியாளர்கள் இயந்திரம் மூலம் தூர்வாரும் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அங்கு வந்த காவல்துறை அதிகாரி ஒருவர் `அமைச்சர்கள் வரும்போது இதுபோன்று அனுமதியின்றி பணிகளில் ஈடுபடக் கூடாது' என்று சமூக ஆர்வலர் குருசாமியை எச்சரித்துள்ளார்.
``நாங்களாக வரவில்லை, பொதுப்பணித்துறை கேட்டுக்கொண்டதால்தான் இரண்டாண்டு காலமாக இப்பணிகளை செய்து வருகிறோம். இப்போதும் பொதுதுப்பணித்துறை அழைத்ததால்தான் வந்து பணிகளை மேற்கொண்டோம்'' என எதிர்ப்பு தெரிவிக்க வாக்குவாதம் ஏற்பட்டது.
`பொதுப்பணியில் ஈடுபட்டுவரும் தன்னை இழிவுபடுத்தியதால் இனிமேல் பணி செய்ய விரும்பவில்லை' என கூறி தூர்வாரும் இயந்திரத்தை வெளியே எடுத்துவரக் கூறினார். பின்பு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அவரை சமாதானப்படுத்தினார்கள்.
இந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் குருசாமி, "வைகையாற்றில் குப்பை கொட்டுவதை தடுப்பதற்காக, ஆற்றை தூய்மையாக வைப்பதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்து எந்தவித லாப நோக்கமின்றி பணிகளை செய்து வருகிறோம். ஆனால் என்னை காவல்துறையினர் இழிவுபடுத்திவிட்டனர். ஆற்றை சுற்றிலும் 500-க்கும் மேற்பட்ட கேமராக்கள் அமைத்து கண்காணித்து வருகிறோம். இரண்டு ஆண்டுகளாக டன் கணக்கில் ஆகாயத்தாமரைச் செடிகளையும், குப்பைகளையும் அகற்றியுள்ளோம்.

தற்பொழுது பொதுப்பணித்துறை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வுக்காக இந்த பகுதியில் தூர்வாரும் பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், அமைச்சர்கள் வரும்பொழுது அனுமதியின்றி இதுபோன்ற பணி செய்யக்கூடாது என இழிவுபடுத்தி பேசினார்கள்.
இரண்டு ஆண்டுளாக தூர்வாரும் பணிகளை மேற்கொண்டுவரும் நாங்கள் வருகை தரும் அமைச்சர்களிடம் எங்கள் செயல்பாடு குறித்து பேசலாம் என நினைத்தபோது காவல்துறையினர் எங்களை இழிவுபடுத்தி விட்டனர்" என்றார்.

வைகை ஆற்றை சுத்தம் செய்யும் ஏற்பாடுகளை, இப்பகுதி மக்கள் பிரதிநிதிகள், அரசுத்துறையினர் செய்யாத நிலையில், தனியார் அமைப்பு செய்து வருவதை அவமதிக்கலாமா? என்று பொதுமக்கள் கேட்டு வருகிறார்கள்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
