இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை
அம்பேத்கர் திடலில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கக் கூடாது: சீமான்
அம்பேத்கர் விளையாட்டுத்திடலில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கக் கூடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஆவடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புகழ்பெற்ற கோவில் நகராம் - திருவேற்காடு நகராட்சி கோலடி பகுதியில் 13 ஏக்கர் பரப்பளவில் அறிவாசான் அம்பேத்கர் பெயரில் அமைந்துள்ள விளையாட்டுத் திடலை அழித்து, அங்கு 1000 கோடி செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்க தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முடிவு செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
திருவேற்காடு, பூந்தமல்லி, மாங்காடு நகராட்சிகள் மற்றும் ஒன்பது ஊராட்சிகளை ஒருங்கிணைத்து பாதாள சாக்கடை திட்டத்திற்காக உருவாக்கப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்க திமுக அரசுக்கு வேறு இடமே கிடைக்கவில்லையா? நெருக்கடி மிகுந்த சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகரில் அரசுக்கு சொந்தமான விளையாட்டு திடல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே உள்ளன. அதனையும் அழித்து முடிக்க திமுக அரசு துடிப்பது ஏன்? திமுக ஆட்சியில் புதிதாக விளையாட்டு திடல்கள்தான் உருவாக்கப்படவில்லை; ஏற்கனவே இருக்கும் விளையாட்டு திடல்களையும் அழிப்பதென்பது முறைதானா? விளையாட்டுத் திடல்களை எல்லாம் வேறு பணிகளுக்காக அழித்துவிட்டு விளையாட்டு வீரர்களுக்கு எங்கே சென்று பயிற்சி அளிக்கப் போகிறீர்கள்? இதுதான் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களின் திறன்களை உலகத் தரத்திற்கு வளர்க்கும் முறையா?
தினமும் பல நூறு பிள்ளைகள் பயிற்சி பெறும் விளையாட்டுத்திடலை அழிக்கும் அரசின் விளையாட்டுத்துறை அமைச்சர் தம்பி உதயநிதிக்கு தெரியுமா? தெரியாதா? அல்லது அவருடைய அனுமதியோடுதான் விளையாட்டுத் திடல் அழிக்கப்படுகிறதா? அம்பேத்கர் சிலையை திறந்து வைத்த தம்பி உதயநிதி, அவர் பெயரில் உள்ள திடலை அழிக்க அனுமதிப்பது நியாயம்தானா?
அதுமட்டுமின்றி, கோலடி அம்பேத்கர் விளையாட்டுத் திடல் அருகே, நீர்நிலை, பள்ளிக்கூடம், புகழ்பெற்ற திருவேற்காடு கருமாரியம்மன் கோயில், சிவன் கோயில், தேவாலயம், மக்கள் குடியிருப்புகள் ஆகியவை உள்ள நிலையில் நிலத்தையும் - நீரையும் நாசப்படுத்தி, சுற்றுச்சூழலுக்கும், மக்கள் நலனிற்கும் கேடுவிளைவிக்கும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை அங்கே அமைப்பது ஏன்? அரசுக்கு சொந்தமான யாரும் பயன்படுத்தாத ஒதுக்குப்புறமான பல இடங்கள் உள்ள நிலையில், அவற்றையெல்லாம் விடுத்து மக்கள் நெருக்கமான இடங்களிலேயே கழிவுநீர் சுத்திகரிக்கவும், குப்பைகளை எரிக்கவும் திமுக அரசு இடம் தேர்வு செய்வது ஏன்? என்ற பொதுமக்களின கேள்விகளுக்கு திமுக அரசு உரிய விளக்கமளிக்க வேண்டும்.
ஹிட் - 3 படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!
மாறாக, கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் மீது காவல்துறையை ஏவி, அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு, கைது செய்து சிறையிலடைப்பது கொடுங்கோன்மையாகும். ஆகவே, திருவேற்காடு கோலடி அண்ணல் அம்பேத்கர் விளையாட்டுத் திடலில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட்டு, மக்கள் பயன்பாட்டில் இல்லாத வேறு இடத்திற்கு அதனை இடமாற்றம் செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
இல்லையென்றால், திருவேற்காடு கோலடி அண்ணல் அம்பேத்கர் விளையாட்டுத் திடலை பாதுகாக்க மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி விரைவில் முன்னெடுக்கும் என்பதையும் தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு இவ்வறிக்கையின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.