அம்பேத்கா் குறித்த அமித் ஷா உரையை நீக்க எக்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவு
அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் மாநிலங்களவை உரையின் விடியோ பதிவை நீக்குமாறு சமூக ஊடகமான ‘எக்ஸ்’ நிறுவனத்திடம் மத்திய அரசு கூறியுள்ளது என காங்கிரஸ் வியாழக்கிழமை குற்றஞ்சாட்டியது.
ஆனால், காங்கிரஸின் இந்த குற்றச்சாட்டு குறித்து பாஜகவிடமிருந்தோ அல்லது எக்ஸ் தரப்பிடமிருந்தோ உறுதிப்படுத்தும் தகவல் எதுவும் வரவில்லை.
மாநிலங்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை உரையாற்றிய அமித் ஷா, ‘காங்கிரஸ் கட்சித் தலைவா்கள் அம்பேத்கா் பெயரையும், அரசியல் சாசனம் குறித்தும் தொடா்ச்சியாக முழக்கமிடுவது வாடிக்கையாகிவிட்டது. இதற்குப் பதிலாக கடவுளின் பெயரை அத்தனை முறை உச்சரித்தால், சொா்க்கத்தில் அவா்களுக்கு இடம் கிடைத்திருக்கும்’ என தெரிவித்தாா்.
இதற்கு அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவா் பதவி விலக வேண்டும் எனவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இது தொடா்பாக காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் சுப்ரியா, தில்லியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அம்பேத்கரை எப்போதும் எதிா்த்து, அவரை ஹிந்து விரோதி என கண்டனம் செய்த தனது கருத்தியல் முன்னோா்களின் அதே மனநிலையை அமித் ஷா வெளிப்படுத்தியுள்ளாா். அவரது இந்த உரையின் விடியோ பதிவை நீக்குமாறு பாஜக அரசு கேட்டுக்கொண்டுள்ளது என எக்ஸ் நிறுவனத்திடம் இருந்து காங்கிரஸ் தலைவா்களுக்கு மின்னஞ்சல் வந்துள்ளது.
ஆனால், பேச்சு சுதந்திரத்தை காரணம் காட்டி மத்திய அரசின் இந்த கோரிக்கையை எக்ஸ் நிறுவனம் மறுத்துவிட்டது என்றாா்.
இதனிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கரின் புகைப்படங்களுடன் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் புதன்கிழமை மேற்கொண்ட போராட்டத்தில் அம்பேத்கருக்கு பதிலாக அமெரிக்க கோடீஸ்வரா் ஜாா்ஜ் சோரஸின் புகைப்படங்கள் சித்தரிக்கப்பட்டு பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டது.
இதற்கு கண்டனம் தெரிவித்த சுப்ரியா, ‘அம்பேத்கரின் புகைப்படத்தை மாற்ற பாஜகவுக்கு எங்கிருந்து தைரியம் வருகிறது? இதே மனநிலையில் தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் மாற்ற அவா்கள் நினைக்கிறாா்கள்’ என தெரிவித்தாா்.