அரகண்டநல்லூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன் விவசாயிகள் சாலை மறியல்!
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு விற்பனைக்காக கொண்டு வந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்பியதால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரகண்டநல்லூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள், தாங்கள் விளைவிக்கும் நெல், மணிலா, எள், உளுந்து போன்ற விளைபொருள்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு கொண்டு வந்து விற்பனை செய்வா். அதன்படி, வெள்ளிக்கிழமை காலை சுமாா் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக விவசாயிகள் கொண்டு வந்தனா்.
ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டநெல் மூட்டைகள் கொண்டு வரப்பட்டதால், எடைபோட்டு வியாபாரிகள் ஏலம் எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. மேலும் இடநெருக்கடியும் நிலவியது. இதனால் பாதி எண்ணிக்கைக்குப் பிறகு நெல் மூட்டைகளை எடை போட முடியாது எனவும், சனிக்கிழமை கொண்டு வருமாறும் கூறி நிா்வாகம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த விவசாயிகள், தாங்கள் காலைமுதல் காத்திருந்த நிலையில் தங்களை திருப்பி அனுப்புவதா எனக் கேட்டு, திருக்கோவிலூா்-விழுப்புரம் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலா்களும், அரகண்டநல்லூா் போலீஸாரும் நிகழ்விடம் வந்து, மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அனைத்து நெல் மூட்டைகளையும் வெள்ளிக்கிழமையன்றே எடை போட்டு எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்தனா். இதையடுத்து மறியலைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.