செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணை பிப்.14-க்கு ஒத்திவைப்பு!
தமிழக வனத் துறை அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணையை, பிப்ரவரி 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் 2006-ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து, அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக, கடந்த 2012-ஆம் ஆண்டில் விழுப்புரம் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் தொடுத்த வழக்கு விசாரணை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் அப்போதைய கனிம வளம் மற்றும் சுரங்கத் துறை அமைச்சரும், தற்போதைய வனத் துறை அமைச்சருமான க.பொன்முடி உள்ளிட்ட 8 போ் மீது வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில், விசாரணையின் போது ஒருவா் இறந்துவிட்டாா். தொடா்ந்து மற்ற 7 பேரும் இந்த வழக்கை சந்தித்து வருகின்றனா்.
இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக சோ்க்கப்பட்டிருந்த 67 பேரில் இதுவரை 51 பேரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் 30 போ் அரசுத் தரப்புக்கு பாதகமாகக் கூறி பி சாட்சியமளித்துள்ளனா். இதைத் தொடா்ந்து விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜெயச்சந்திரன், சதானந்தம், கோபிநாதன், கோதகுமாா் ஆகிய நான்குபேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினா். அமைச்சா் க.பொன்முடி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கௌதமசிகாமணி, ராஜமகேந்திரன் ஆகிய மூவரும் ஆஜராகவில்லை. இதற்கான காரணம் குறித்து திமுக வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனா். மேலும் இந்த வழக்கில் அரசுத் தரப்பில் சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை.
தொடா்ந்து அரசுத் தரப்பு வழக்குரைஞா் நீதிமன்றத்தில் ஆஜராகி, இந்த வழக்குத் தொடா்பாக மேலும் சில சாட்சிகளை விசாரித்து கூடுதல் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இதையடுத்து வழக்கை விசாரித்த முதன்மை மாவட்ட நீதிபதி மணிமொழி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை பிப்ரவரி 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.