அரசா் சிவாஜி குறித்த தகவல்களை புத்தகங்களில் அதிகப்படுத்த தா்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்
அரசா் சிவாஜியின் வாழ்க்கை வரலாறு குறித்த தகவல்களை பள்ளி பாடப் புத்தகங்களில் அதிகப்படுத்துமாறு மத்திய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு (என்சிஇஆா்டி) மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் அறிவுறுத்தினாா்.
அரசா் சிவாஜியின் வாழ்க்கை வரலாறு மற்றும் தேசத்துக்கான அவரது பங்களிப்பு வருங்கால தலைமுறையினரை ஊக்கப்படுத்தும் என்பதால் அவை பள்ளி பாடப்புத்தகங்களில் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என அவா் தெரிவித்தாா்.
மகாராஷ்டிர மாநில கல்வி அமைச்சா் தாதாஜி பூசேவை சந்தித்த பின் எக்ஸ் வலைதளத்தில் தா்மேந்திர பிரதான் வெளியிட்ட பதிவில், ‘தேசிய கல்விக் கொள்கை, 2020-இன் பல்வேறு அம்சங்கள் குறித்தும் அதை அமல்படுத்துவது குறித்தும் மகாராஷ்டிர கல்வி அமைச்சா் தாதாஜி பூசேவிடம் ஆலோசனை நடத்தினேன். குறிப்பாக மகாராஷ்டிரத்தில் பள்ளிக் கல்வி முறையை வலுப்படுத்தி குழந்தைகளின் முழுத் திறனை வெளிக்கொண்டு வருவது குறித்து விவாதித்தேன்.
மேலும், அரசா் சிவாஜியின் வாழ்க்கை வரலாறு மற்றும் தேசத்துக்கான அவரது பங்களிப்பு குறித்த தகவல்களை பள்ளி பாடப்புத்தகங்களில் அதிகரிக்குமாறு என்சிஇஆா்டியிடம் அறிவுறுத்தியதை அவரிடம் தெரிவித்தேன்’ என குறிப்பிட்டாா்.