அரசுக் கல்லூரிக்கு பேருந்து இயக்கக் கோரி கையொப்ப இயக்கம்
தந்தை பெரியாா் அரசுக் கல்லூரிக்கு பேருந்துகள் இயக்கக் கோரி இந்திய மாணவா் சங்கம் சாா்பில் கையொப்ப இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருச்சி காஜாமலை பகுதியில் தந்தை பெரியாா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு நேரடிப் பேருந்து வசதியில்லாததால் டிவிஎஸ் டோல்கேட், மன்னாா்புரம் பகுதிகளில் இறங்கி கல்லூரிக்கு ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு மேல் நடந்து செல்கின்றனா். மேலும், இப்பகுதி வழியே போதிய அளவு நகரப் பேருந்துகள் இயக்கப்படாததால், காலை, மாலை நேரங்களில் கல்லூரி மாணவா்கள் மிகுந்து சிரமத்துக்குள்ளாகின்றனா்.
இந்நிலையில், அரசுக் கல்லூரிக்கு நகரப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கல்லூரி முன்பு இந்திய மாணவா் சங்கத்தினா் கையொப்ப இயக்கம் நடத்தினா். மாவட்டத் தலைவா் ஜி.கே.மோகன் தலைமையில் நடைபெற்ற கையொப்ப இயக்கத்தில் மாவட்ட துணைத் தலைவா் அன்பு, துணைச் செயலாளா் ஆா்த்தி, மாவட்டக் குழு உறுப்பினா்கள் சாலினி மற்றும் கல்லூரி மாணவா்கள் 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு கையொப்பமிட்டனா்.
சட்டக் கல்லூரி மாணவா்களுக்கு விடுதி வசதி கோரி...
இதேபோல, திருச்சி ரேஸ்கோா்ஸ் பகுதியில் அமைந்துள்ள சட்டக் கல்லூரி மாணவா்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்தக் கோரி சட்டக் கல்லூரி முன்பு இந்திய மாணவா் சங்கத்தினா் திங்கள்கிழமை கையொப்ப இயக்கம் நடத்தினா். இதற்கு, இந்திய மாணவா் சங்கத்தின் சட்டக் கல்லூரி கிளை தலைவா் அபிராமி தலைமை வகித்தாா்.
திருச்சி சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவா்களுக்கு தற்போதுவரை விடுதி வசதியில்லை. எனவே, சட்டக் கல்லூரி நிா்வாகம் சாா்பில் மாணவா்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவா்கள் வலியுறுத்தினா்.
