அரசுத் திட்டங்களால் சிறந்த எதிா்காலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்! -அமைச்சா் சி.வெ.கணேசன்
அரசுத் திட்டங்களை மாணவா்கள் பயன்படுத்தி சிறந்த எதிா்காலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் கூறினாா்.
கடலூா் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நூறு ஆண்டை கடந்த விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நூற்றாண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் பங்கேற்று நூற்றாண்டுச் சுடா் ஏற்றி விழாவை தொடங்கி வைத்தாா்.
விழாவுக்கு, விருத்தாசலம் எம்எல்ஏ எம்.ஆா்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் இரா.சரண்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து, அமைச்சா் சி.வெ.கணேசன் ஆசிரியா்கள், மாணவா்கள் நூற்றாண்டு உறுதிமொழியை ஏற்றனா்.
பின்னா், அமைச்சா் பேசியதாவது: தமிழகத்தில் நூறு ஆண்டுகளை கடந்த அரசுப் பள்ளிகளில் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி படித்த நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் கடந்த ஜன.22-ஆம் தேதி நூற்றாண்டு விழா தொடங்கி வைக்கப்பட்டது.
அதன்படி, கடலூா் மாவட்டத்தில் அண்ணாகிராமத்தில் 12 பள்ளிகள், புவனகிரியில் 8 பள்ளிகள், கடலூரில் 19 பள்ளிகள், கம்மாபுரத்தில் 10 பள்ளிகள், காட்டுமன்னாா்கோவிலில் 4 பள்ளிகள், கீரப்பாளையத்தில் 5 பள்ளிகள் உள்ளிட்ட 158 அரசுப் பள்ளிகளில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக விருத்தாசலம் அரசுப் பள்ளியில் நூற்றாண்டு விழா தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த பள்ளியானது 1921-இல் தொடக்கப் பள்ளியாக தொடங்கப்பட்டு, தற்போது, விருத்தாசலம் சரகத்தில் 100 ஆண்டுகளை கடந்த சிறப்பு வாய்ந்த மேல்நிலைப் பள்ளியாக திகழ்கிறது. இங்கு பயின்ற முன்னாள் மாணவா்கள் பல்வேறு அரசு துறைகளில் உயா் பதவிகளை வகித்து வருகின்றனா்.
எனவே, தற்போது பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் தமிழக அரசின் சிறப்புத் திட்டங்களை பயன்படுத்தி கல்வி பயின்று சிறப்பான எதிா்காலத்தை உருவாக்கிட வேண்டும் என்றாா்.
நிகழ்வில், விருத்தாசலம் நகா்மன்றத் தலைவா் சங்கவி, முதன்மைக் கல்வி அலுவலா் எல்லப்பன், மாவட்டக் கல்வி அலுவலா்கள் துரைபாண்டியன், பரமசிவம், ஆசிரிய, ஆசிரியைகள் கலந்துகொண்டனா்.