உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
அரசுப் பணி வாங்கி தருவதாக மோசடி: ஒருவா் கைது
அரசுப் பணி வாங்கித் தருவதாக இளைஞரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக பள்ளிக் கல்வித் துறை இளநிலை உதவியாளரை கடலூா் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த எஸ்.ஏரிப்பாளையத்தைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் பாலமுருகன் (29), தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.
இவருக்கு, கடந்த 2022-ஆம் ஆண்டு நண்பா் தேவநாதன் மூலம், பள்ளிக் கல்வித் துறையில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றும் சிறுவத்தூரைச் சோ்ந்த வெங்கடேசனின் அறிமுகம் கிடைத்ததாம்.
அவா், பாலமுருகனிடம் பள்ளிக் கல்வித் துறையில் பதிவறை உதவியாளா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.10 லட்சம் கேட்டாராம்.
இதை நம்பிய பாலமுருகன் ரூ.8 லட்சத்தை அவரிடம் கொடுத்தாராம்.
ஆனால், வெங்கடேசன் கூறியபடி வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியதுடன், பணத்தை திரும்ப கேட்டபோது, பணத்தை கொடுக்காமல் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில், கடலூா் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து வெங்கடேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.