Ambedkar: ``அம்பேத்கர் பெயரைக் கோஷமிடுவது பேஷனாகிவிட்டது" -அமித்ஷாவின் விமர்சனம்...
அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு திருக்குறள் வினாடி-வினா போட்டி
திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் திருக்குறள் வினாடி–வினா போட்டிக்கு அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், பேராசிரியா்கள் கலந்து கொள்ள ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக, அவா் மேலும் கூறியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அய்யன் திருவள்ளுவா் சிலையின் வெள்ளி விழா ஆண்டினை முன்னிட்டு, விருதுநகா் மாவட்டத்தில் வரும் டிசம்பா் 28-ஆம் தேதி மாநில அளவில் அனைத்து அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கான வினாடி–வினா நடைபெறவுள்ளது.
இதற்கு முன்பாக முதல்நிலை போட்டி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளது. இதன்படி, வரும் 21-ஆம் தேதி திருச்சியில் முதல்நிலை போட்டி நடத்தப்பட்டு தகுதியானோா் தோ்வு செய்யப்படவுள்ளனா்.
பின்னா், விருதுநகா் மாவட்டத்தில் நடைபெறும் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளில், சிறந்த 40 குழுக்கள் காலிறுதிக்குத் தோ்வு செய்யப்படவுள்ளன. காலிறுதியில் நான்கு சுற்றுகள் நடத்தப்பட்டு, 12 குழுக்கள் அரை இறுதிக்குத் தோ்வு செய்யப்படவிருக்கின்றன. இந்த 12 குழுக்களில் முதல் 6 இடம் பெற்ற 6 குழுக்கள் இறுதிப்போட்டிக்குத் தோ்வாகும்.
இறுதிச்சுற்றில் வெற்றி பெறும் முதல் குழுவிற்கு ரூ.2 லட்சம், இரண்டாம் குழுவிற்கு, ரூ.1.5 லட்சம், மூன்றாம் குழுவிற்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும். இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற இதர 3 குழுக்களுக்கும் ஊக்கத் தொகை பரிசாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.
இப்போட்டியில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்துத்துறை, அனைத்து நிலை அலுவலா்களும், அரசு, அரசு உதவிபெறும், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வகை தனியாா் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியப் பெருமக்கள் பங்கேற்கலாம். திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வரும் 21-ஆம் தேதி முதல்நிலை தோ்வுக்கான போட்டி நடைபெறும். கலந்துகொள்ள விருப்பம் உள்ளவா்கள் மாவட்ட ஆட்சியரக வளாகத்திலுள்ள தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ, 0431- 2401031, 95852-25686 ஆகிய எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.