அரசு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை
அரசு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள சுமாா் 3 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியாளா்களின் நலன் கருதி பணியிட மாறுதல்களைக் கலந்தாய்வு மூலமே செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கச் சிறப்புத் தலைவா் கு. பால்பாண்டியன் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா்கள் கா. முருகக்குமாா், லாரன்ஸ், மாநிலச் செயலா் ஷேக் உமா்ஷா, ஆலோசகா் தரும. கருணாநிதி, மாவட்டச் செயலா் முரளிகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.