ஊட்டி: "நான் பெற்ற பிள்ளைக்குப் பெயர் வைக்கும் வேலையைச் செய்கிறார் ஸ்டாலின்" - இ...
அரசு மருத்துவமனையில் போதிய வசதியின்றி பிரசவம்: தில்லி அரசுக்கு என்எச்ஆர்சி நோட்டீஸ்
நமது நிருபர்
தில்லியில் உள்ள ஐஹெச்பிஏஎஸ். மருத்துவமனையில் போதிய வசதியின்றி சிசு பிறந்ததாக ஊடகத்தில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, தேசிய மனித உரிமை ஆணையம் (என்எச்ஆர்சி) தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தில்லி அரசுக்கு என்எச்ஆர்சி உத்தரவிட்டுள்ளது.
தில்லி ஐஹெச்பிஏஎஸ் மருத்துவமனையில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி கடந்த செப்.7-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட ஆதரவற்ற பெண்ணுக்கு பிறந்த குழந்தை, மருத்துவமனையில் போதிய வசதியின்மை காரணமாக உயிரிழந்தது.
இது தொடர்பாக செப்.10-ஆம் தேதி வெளியான ஊடகச் செய்தியில், "அவசர ஊர்தியில் அருகிலுள்ள சுவாமி தயானந்த் மருத்துவமனைக்கு அக்குழந்தையும், தாயும் கொண்டு செல்லப்பட்டனர்.
அதற்கு முன்னர், குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவதற்கான கருவியை கையாள்வதற்குக் கூட மருத்துவமனை ஊழியர் நீண்ட நேரம் எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், குழந்தை உயிரிழக்க நேரிட்டது' எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு என்எச்ஆர்சி தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக என்எச்ஆர்சி தெரிவிக்கையில், "ஊடகங்களில் வெளியான இந்தச் செய்தி உண்மை எனில், இது மனித உரிமைகளை மீறக் கூடியதாகிவிடும்.
இந்த விவகாரம் தொடர்பாக இரு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தலைநகர் தில்லி அரசின் தலைமைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பிரசவத்திற்கு தேவையான வசதிகள் இல்லாத போதிலும் அந்த மருத்துவமனையில் அந்த கர்ப்பிணி அனுமதிக்கப்பட்டதாக ஊழியர்கள் தெரிவித்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அப்பெண் மற்றொரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது' என்று என்எச்ஆர்சி தெரிவித்துள்ளது.