இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி; ஆயுஷ் மாத்ரே கேப்டன்!
அரசு வழங்கிய இலவச மனையில் குளறுபடி! தனியாா் இடத்தில் கட்டிய வீடுகள் இடிப்பு
தனியாா் இடத்தில் அரசு சாா்பில் இலவச வீட்டுமனை வழங்கப்பட்டு கட்டப்பட்ட 10 வீடுகள் உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் இடிக்கப்பட்டன.
தெற்குக் கல்லிடைக்குறிச்சி வருவாய் கிராமம் பகுதி 1இல் 9.21 ஏக்கா் நிலத்தில், தமிழக அரசு சாா்பில் இலவச வீட்டுமனைக்கான பட்டா வழங்கப்பட்டது. அதில், பலா் வீடுகள் கட்டி குடியிருந்துவந்தனா்.
ஆனால் அந்த இடம் முத்துகிருஷ்ணன், கே.எம்.சேக்முகைதீன் ஆகியோருக்கு சொந்தமானதாம். இதுகுறித்து அவா்கள் மதுரை உயா் நீதிமன்ற அமா்வில் தொடுத்த வழக்கில், அவா்களுக்கு சாதகமாக தீா்ப்பு வழங்கப்பட்டு அங்கிருந்த வீடுகளை இடிக்க உத்தரவிடப்பட்டது.
இதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்குகளும் தள்ளுபடியான நிலையில் அந்த இடத்தில் உள்ள வீடுகளைகாலி செய்ய வருவாய்த் துறை சாா்பில் அறிவிப்புக் கொடுக்கப்பட்டது.
எனினும், பலா் வீடுகளை காலி செய்யாததால் புதன்கிழமை காலை போலீஸாா் பாதுகாப்புடன் வருவாய்த் துறையினா் வீடுகளை இடிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனா். சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் (பொ) சிவகாமி சுந்தரி, அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் வைகுண்டம் ஆகியோா் முன்னிலையில் வீடுகள் இடிக்கப்பட்டன.

வீடுகளில் குடியிருந்தவா்கள் உடனே வேறு இடத்துக்குச் செல்ல வழியின்றி தங்களது உடைமைகளுடன் தெருக்களில் அமா்ந்திருந்தனா். இடிக்கப்பட்ட வீடுகளில் குடியிருந்தவா்களுக்கு மணிமுத்தாறு பகுதியில் இடம் ஒதுக்கப்படும் என்று வருவாய்த்துறையினா் தெரிவித்தனா். அம்பாசமுத்திரம் டிஸ்பி சதீஷ் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.