Gambhir: ``எல்லோரும் உள்ளூர் கிரிக்கெட் ஆடவேண்டும்; இலையென்றால்..." - BGT தோல்வி...
அருப்புக்கோட்டையில் ஆய்வகம்; சிக்கிய `பார்ச்சூனர்’ வெங்கடேசன் - போதைப் பொருள் கேங்கின் பகீர் பின்னணி
கடந்த சில மாதங்களுக்கு முன்பு முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருளை விற்ற பர்மா பஜாரைச் சேர்ந்த திவான் முகமது என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரித்தபோது சென்னை மாதவரம் ரோஜா நகரில் குடியிருக்கும் `பார்ச்சூனர்' வெங்கடேசன் என்பவர் சப்ளை செய்த தகவலைத் தெரிவித்தார். இதையடுத்து வெங்கடேசனை சென்னை போலீஸ் கமிஷனரின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் போதைப் பொருளுக்கெதிரான நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது வெங்கடேசன் வடமாநிலங்களிலிருந்து மெத்தபெட்டமைனின் மூலப் பொருளை விலைக்கு வாங்கி போதைப் பொருளை தயாரித்து தமிழகம் முழுவதும் சப்ளை செய்வது உறுதியானது. இதையடுத்து வெங்கடேசனை கையும் களவுமாக பிடிக்க சென்னை போலீஸார் முடிவு செய்தனர்.
இதற்காக கடந்த 21-ம் தேதி மாதவரம் எம்.ஆர்.ஹெச் ரோடு லெதர் கூட்ஸ் பகுதியில் வெங்கடேசன், பெரியளவில் போதைப் பொருளை கைமாற்றும் ரகசிய தகவல் மாதவரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிவசங்கருக்கு கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீஸ் டீமுடன் சென்ற சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர், மறைந்திருந்து போதைப் பொருள் கைமாறுவதை நோட்டமிட்டுக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த வெங்கடேசனிடமிருந்து ஒரு பையை இளைஞர் ஒருவர் வாங்கினார். உடனடியாக அங்குச் சென்ற போலீஸ் டீம் வெங்கடேசனையும் அந்த இளைஞனையும் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்களிடமிருந்து , ஒன்றரை கிலோ எடையுள்ள மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருளையும் பறிமுதல் செய்தனர். அந்த இளைஞரின் பெயர் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கார்த்திக் எனத் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து வெங்கடேசனிடம் விசாரித்தபோது அவர் மூலம் தமிழகம் முழுவதும் போதைப் பொருள் சப்ளையாகுவது தெரியவந்தது.
வெங்கடேசனின் பின்னணி குறித்து நம்மிடம் பேசிய மாதவரம் தனிப்படை போலீஸார், ``கைது செய்யப்பட்ட வெங்கடேசனின் பள்ளி நண்பன் சிவக்குமார். இவர்கள் இருவரும் கடந்த 2014-ம் ஆண்டு டெல்லிக்குச் சென்று போதை மாத்திரைகளை வாங்கி விற்று வந்திருக்கிறார்கள். அதன்மூலம் சிவக்குமாருக்கும் வெங்கடேசனுக்கும் அதிகளவில் பணம் கிடைத்திருக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில் பஞ்சாப் பாட்டியாலா போலீஸாரிடம் வெங்கடேசன், சிவக்குமார், இவர்களின் கூட்டாளிகள் சண்முகம், மணி, சுரேஷ் ஆகியோர் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து அவர்களை கைது செய்த போலீஸார், பாட்டியாலா சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் வெங்கடேசன், அவரின் கூட்டாளிகளுக்கு பத்தாண்டுகள் சிறைத் தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளது.
வெங்கடேசன் சிறையிலிருந்தபோது அதே சிறையிலிருந்த பிரபல போதைப் பொருள் கடத்தல் புள்ளிகளான மணிப்பூரைச் சேர்ந்த நிஜாமுதின், சண்டிகரைச் சேர்ந்த சண்ணிகல் ஆகியோரின் நட்பு கிடைத்திருக்கிறது. நிஜாமுதினும் சண்டிக்கல்லும் சேர்ந்து மணிப்பூர், உள்ளிட்ட வடமாநிலங்களில் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருளை தயாரிக்கும் மூலப்பொருளை விலைக்கு வாங்கி போதைப் பொருளைத் தயாரித்து விற்று வந்திருக்கிறார்கள்.
சிறையிலிருந்து வெளியில் செல்லும்போது நிஜாமுதினும் சண்டிக்கல்லும் வெங்கடேசனிடம் தங்களின் செல்போன் நம்பரைக் கொடுத்து தமிழகத்தில் போதைப் பொருளை விற்பது தொடர்பாக டீலிங் பேசியிருக்கிறார்கள். அதற்கு ஒகே என்று கூறிய வெங்கடேசன், தனக்கு கிடைத்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். அதனால் சிறையிலிருந்து கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெங்கடேசன் வெளியில் வந்தார். பின்னர் சென்னைக்கு வந்த அவர், போதைப் பொருள் கடத்தல் புள்ளிகளான நிஜாமுதின், சண்டிக்கல்லை செல்போனில் தொடர்பு கொண்டு மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை சப்ளை செய்யும்படி கூறியிருக்கிறார். அதற்கு அவர்களும் ஓகே என்று கூறியிருக்கிறார்கள். செல்போனில் பேசினால் போலீஸாரிடம் சிக்கிக் கொள்வோம் எனக் கருதிய இந்தக் கடத்தல் கும்பல், செல்போன் ஆஃப் ஒன்று மூலம் பேசி வந்திருக்கிறார்கள்.
வெங்கடேசன் தனக்கு தேவையான போதைப் பொருளை அந்தச் செல்போன் செயலி மூலம் ஆர்டர் கொடுத்ததும், உடனடியாக வடமாநிலங்களிலிருந்து சென்னைக்கு வரும் லாரிகள் மூலம் நிஜாமுதினும் சண்டிக்கல்லும் அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதற்கான பணத்தை மண்ணடியைச் சேர்ந்த சாகுல் ஹமித் மதுரையைச் சேர்ந்தலட்சுமி நரசிம்மன் ஆகியோரிடம் வெங்கடேசன் கொடுத்து வந்திருக்கிறார். இந்தப் பண பரிவர்த்தனை பெரும்பாலும் ஹவாலா அடிப்படையில் நடந்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.
போதைப் பொருள் விற்பனை மூலம் லட்சங்கள் கொட்டத் தொடங்கியதும் வெங்கடேசனின் லைஃப் ஸ்டைல் மாறியது. பார்ச்சூனர் கார் உள்ளிட்ட விலை உயர்ந்த கார்களில் அவர் உலா வரத் தொடங்கினார். இவ்வளவு பணம் எப்படி வந்தது என யாரும் கேட்கக் கூடாது என கருதிய வெங்கடேசன், மாதவரம் பகுதியில் ரியல் எஸ்டேட் பிசினஸ், சவுடு மண் பிசினஸ் செய்வதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறியிருக்கிறார்.
ஆனால் இவரின் முழு நேர பிசினஸ் போதைப் பொருள். அதில் கிடைத்த பணத்தில் பார்ச்சூனர், ஸ்கார்ப்பியோ, இரண்டு பங்களா வீடுகள் என வாங்கி ஆடம்பரமாக வெங்கடேசன் வாழ்ந்து வந்திருக்கிறார். அவரை மாதவரம் ஏரியாவில் `பார்ச்சூனர்’ வெங்கடேசன் என்றே அழைத்திருக்கிறார்கள். பிசினஸ் மூலம் சம்பாதிப்பதாக கருதி அவர் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை. அதே நேரத்தில் சொகுசு கார்களில் சென்றுதான் வெங்கடேசன், போதைப் பொருளை கைமாற்றி விடுவார். மேலும் தனக்கு விசுவாசமான கார்த்திக், திவான் முகமது மூலம் சென்னை முழுவதும் மெத்தம்பெட்டமைனை விற்று வந்திருக்கிறார். ஒரு கிராம் மெத்தபெட்டமைனை 150 ரூபாய்க்கு வாங்கும் வெங்கடேசன் அதை 3,000 ரூபாய்க்கு விற்றதால் அவருக்கு லட்சக்கணக்கில் பணம் கிடைத்திருக்கிறது.
வெங்கடேசன் கைதான பிறகு அவரின் செல்போனை ஆய்வு செய்த போது அவர்தான் சென்னை முழுவதும் மெத்தம்பெட்டமைனை சப்ளை செய்திருப்பது தெரியவந்தது. அவரின் நெட்வொர்க்கிலிருப்பவர்களைத் தேடிவருகிறோம். அதே நேரத்தில் வெங்கடேசனுக்கு போதைப் பொருளை சப்ளை செய்த நிஜாமுதின், சண்டிக்கல்லைப் பிடிக்க தனிப்படை போலீஸார் மணிப்பூருக்கும் சண்டிகருக்கும் சென்றுள்ளனர்" என்றனர்.
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``போதைப் பொருளுக்கெதிரான நுண்ணறிவுப் பிரிவு போலீஸார், மாதவரம் போலீஸார் ஆகியோர் இணைந்து இந்த ஆக்ஷனில் இறங்கினோம். இந்த வழக்கில் ஏற்கெனவே கடந்த 21-ம் தேதி வெங்கடேசன், கார்த்திக் ஆகியோரை கைது செய்தோம். அவர்களிடமிருந்து இரண்டு கார்கள், பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தோம். அதோடு ஒன்றரை கிலோ மெத்தம்பெட்டமைனையும் பறிமுதல் செய்தோம். வெங்கடேசன் அளித்த தகவலின்படி மண்ணடியைச் சேர்ந்த சாகுல், லாரன்ஸ் ஆகியோரை கடந்த 30-ம் தேதி கைது செய்தோம். அவர்களிடமிருந்து 128 கிராம் மெத்தம்பெட்டமைனை பறிமுதல் செய்தோம்.
இந்தக் கும்பல் போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தில் வீடுகள் வாங்கியிருப்பது தெரியவந்தது. அதனால் அந்த வீடுகளின் ஆவணங்களையும் பறிமுதல் செய்திருக்கிறோம். தொடர்ந்து நடத்திய விசாரணையில் வெங்கடேசனின் மனைவி ஜான்சி மெரிடா என்பவருக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதனால் அவரையும் கைது செய்தோம். அடுத்தடுத்து நடந்த விசாரணையில் மதுரையைச் சேர்ந்த லட்சுமி நரசிம்மன், முருகன் ஆகியோரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 150 கிராம் எடையுள்ள மெத்தம்பெட்டமைனைப் பறிமுதல் செய்தோம். இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 18 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளைப் பறிமுதல் செய்திருக்கிறோம். இவற்றின் மதிப்பு 17 கோடியாகும். சொத்துக்கள், கார்களின் மதிப்பு 5 கோடியாகும். வடமாநிலங்களிலிருந்து போதைப் பொருள்களைத் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருளை வாங்கிய இந்தக் கும்பல் அதை அருப்புக்கோட்டையில் ஆய்வகம் அமைத்து தயாரித்திருக்கிறார்கள். அதுதொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது" என்றார்.