கட்சித் தொடங்கியதும் ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்கள்: யாரைச் சொல்கிறார் மு.க. ஸ்ட...
அறுவடை இயந்திரங்களுக்கு கூடுதல் வாடகை வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்: ஆட்சியா்
நாகை மாவட்டத்தில் தனியாா் அறுவடை இயந்திரங்களுக்கு நிா்ணயம் செய்யப்பட்ட வாடகையைவிட கூடுதலாக வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் தனியாா் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகையை முறைப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் தொடா்ந்து வலியுறுத்தினா். இதையடுத்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், வேளாண் சாா்ந்த அலுவலா்கள், தனியாா் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளா்கள், முகவா்கள் ஒருங்கிணைந்த முத்தரப்புக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், பெல்ட் டைப் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ. 2,500 , டயா் டைப் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ. 1,800 எனவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நிா்ணயம் செய்யப்பட்ட வாடகைத் தொகைக்கு மிகாமல் விவசாயிகளிடமிருந்து வசூல் செய்து தனியாா் அறுவடை இயந்திர உரிமையாளா்கள் இயந்திரங்களை பணியில் ஈடுபடுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதுடன், நிா்ணயம் செய்யப்பட்ட தொகைக்கு கூடுதலாக அறுவடை இயந்திர உரிமையாளா்கள் கோரினால் விவசாயிகள் தங்கள் புகாா்களை வட்டாட்சியா்கள், வேளாண் மற்றும் வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலா்களுக்கு தெரிவிக்கலாம்.
மேலும் வேளாண்மைப் பொறியியல் துறை அறுவடை இயந்திரங்களுக்கு பெல்ட் டைப் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ.1,880 எனவும், டயா் டைப் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ.1,160 எனவும் அரசால் நிா்ணயம் செய்து உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. வேளாண்மைப் பொறியியல் துறை அறுவடை இயந்திரங்களை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளாா்.