திண்டுக்கல் கன்னிவாடி: `அத்துமீறி வனப்பகுதிக்குள் சென்ற 29 பேருக்கு அபராதம்' -...
அவலாஞ்சியில் 260 மி.மீ. மழை பதிவு
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில் 260 மி.மீ. மழை பதிவானது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் அநேக இடங்களில் பலத்த மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில் 260 மி.மீ., மேல் பவானி (நீலகிரி) - 190 மி.மீ., சின்னக்கல்லாறு (கோவை) - 170 மி.மீ., நடுவட்டம் (நீலகிரி) - 160 மி.மீ., சின்கோனா (கோவை) 80 மி.மீ, வால்பாறை (கோவை), சோலையாறு (கோவை) - தலா 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மிதமான மழை: இதற்கிடையே, மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (ஜூலை 28) முதல் ஆக. 2 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், ஓரிரு இடங்களில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 28) லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும், அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
வெயில் சதம்: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட், மதுரை நகரில் 102.56 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக் கடலில் ஜூலை 28, 29-ஆம் தேதிகளில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இந்தப் பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.