ஆடுகள மேற்பார்வையாளரிடம் கம்பீர் நடந்துகொண்ட விதம் சரியா? மேத்யூ ஹைடன் கூறுவதென்ன?
ஓவல் திடலின் ஆடுகள மேற்பார்வையாளரிடம் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் நடந்து கொண்ட விதம் சரியா என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் பேசியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. ஓவலில் நடைபெற்ற கடைசி டெஸ்ட்டில் வெற்றி பெற்று இந்த தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்பாக, ஓவல் திடலின் ஆடுகள மேற்பார்வையாளருக்கும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இது குறித்து பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்தனர்.
கௌதம் கம்பீர் நடந்துகொண்ட விதம் சரியா?
ஓவல் திடலின் ஆடுகள மேற்பார்வையாளரிடம் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் சற்று தன்மையாக பேசியிருக்கலாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆடுகளம் சேதமடையக் கூடாது என்பதில் மேற்பார்வையாளர்கள் எப்போதும் கவனமாக இருப்பார்கள். இங்கிலாந்தில் ஆடுகள மேற்பார்வையாளர்கள் சற்று கடுமையாகவே இதனை பின்பற்றுவர். ஆனால், கௌதம் கம்பீர் சற்று தன்மையாக பேசியிருக்கலாம் என நினைக்கிறேன். ஆனால், மிக முக்கியமான இறுதிப்போட்டிக்காக இந்திய அணி பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது அவரது கவலையாக இருந்தது என்பதும் உண்மை என்றார்.
ஆடுகளத்தில் இருந்து 5 மீட்டர் விலகி நின்று பார்க்குமாறும், ஆடுகளத்தை சேதப்படுத்த வேண்டாம் எனவும் மேற்பார்வையாளர் கூறியதாகக் கூறப்படுகிறது.
அதற்கு பதிலளித்த கௌதம் கம்பீர், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் கூற வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு அந்த உரிமை இல்லை. நீங்கள் ஒரு சாதராண ஆடுகள மேற்பார்வையாளர் மட்டுமே எனக் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: ஜிம்பாப்வேவை 359 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!