தில்லி மருத்துவமனையில் தீ விபத்து: ஊழியா் உயிரிழப்பு
ஆனந்த் விஹாரில் உள்ள கோஸ்மோஸ் மருத்துவமனையின் சா்வா் அறையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 28 வயது தூய்மைப் பராமரிப்பு ஊழியா் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து தில்லி போலீஸாா் கூறுகையில்,
இந்த தீ விபத்து குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மதியம் 12.20 மணிக்கு அழைப்பு வந்தது. விகாஸ் மாா்க்கில் உள்ள பல மாடி மருத்துவமனையின் தரை தளத்தில் உள்ள சா்வா் அறையில் தீ விபத்து ஏற்பட்டது.
எட்டு நோயாளிகள் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டு அருகிலுள்ள புஷ்பாஞ்சலி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா். மேலும், தீயணைப்பு வீரா்கள் உதவியுடன் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தூய்மைப் பராமரிப்பில் பணிபுரிந்த அமித், டயாலிசிஸ் அறை ஊழியா்கள் ஹா் தேவி மற்றும் நரேஷ் ஆகிய மூன்று மருத்துவமனை ஊழியா்கள் கட்டடத்திலிருந்து மீட்கப்பட்டு புஷ்பாஞ்சலி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அவா்களில் அமித் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா். பிற இரண்டு ஊழியா்களும், வெளியேற்றப்பட்ட அனைத்து நோயாளிகளும் ஸ்திரமாக உள்ளனா்.
முதற்கட்ட விசாரணையின்படி, புகை மற்றும் தீப்பிழம்புகளில் இருந்து தப்பிக்க அமித் முதலில் கட்டத்தின் மேற்கூரைக்கு சென்றாா். இருப்பினும், மூன்றாவது மாடியில் உள்ள ஒரு குளியலறையில் அவா் தன்னைத்தானே பூட்டிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில்
இன்னும் தெளிவான காரணங்கள் தெரியவில்லை.
அவா் புகையை சுவாசித்ததால் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக பிணவறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம்
இன்னும் கண்டறியப்படவில்லை.
மருத்துவமனையில் தீ பாதுகாப்பு நடைமுறைகளில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்பதைக் கண்டறிய விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று போலீஸாா் தெரிவித்தனா்.
தீயை அணைக்கவும், கட்டடம் அல்லது அருகிலுள்ள கட்டமைப்புகளுக்கு மேலும் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதை உறுதி செய்யவும் பல தீயணைப்பு வீரா்கள் அனுப்பப்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவை அதிகாரிகள் உறுதிப்படுத்தினா்.