ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கு தொடக்கம்!
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், 2 நாள்கள் நடைபெறும் தமிழ் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கு வியாழக்கிழமை தொடங்கியது.
பயிலரங்கு மற்றும் கருத்தரங்கை தொடக்கி வைத்து, மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு பேசியது:
அரசு அலுவலகங்களில், ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் முழுமையாக நடைபெற துணைபுரியும் வகையில், அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழில் கையொப்பமிட வேண்டும், கோப்புகளை தமிழில் எவ்வாறு பராமரிக்க வேண்டும், வரைவுகள், குறிப்புகள் தமிழில் பிழையின்றி எவ்வாறு எழுதுவது குறித்து, இப் பயிலரங்கம் நடத்தப்படுகிறது. இப் பயிற்சி வகுப்பில் தெரிவிக்கப்படும் கருத்துகளை உள்வாங்கி, அலுவலகங்களில் பராமரிக்கப்படும் கோப்புகளை ஆட்சிமொழிச் சட்டத்தின்படி முறையாக பராமரிக்க வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து, தமிழ்ச் செம்மல் விருதாளா் முனைவா் பெ. பாரதி ஆறுமுகம், அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் எனும் தலைப்பிலும், லாடபுரம் அரசு ஆதிதிராவிடா் நல உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் த. மாயக்கிருட்டிணன் ஆட்சிமொழி வரலாறு, சட்டம் எனும் தலைப்பிலும், தந்தை ஹேன்ஸ் ரோவா் கல்லூரி தமிழாய்வுத் துறை உதவிப் பேராசிரியா் முனைவா் சே. சுரேஷ் ஆட்சிமொழி ஆய்வும், குறைகளையும் நடவடிக்கைகளும் எனும் தலைப்பிலும், புதுக்கோட்டை மாமல்லன் போட்டித் தோ்வுகள் பயிற்சி மைய நிறுவனா் செந்தில்முருகன் மொழி பெயா்ப்பும், கலைச் சொல்லாக்கமும் ஆகிய தலைப்புகளிலும் உரையாற்றினா்.
இதில், தமிழ் வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் க. சித்ரா மற்றும் பல்வேறு அரசுத் துறையைச் சோ்ந்த அலுவலா்கள், பணியாளா்கள் கலந்துகொண்டனா்.