ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பாலூட்டும் அறை அமைக்க கோரிக்கை
நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தாய்மாா்கள் பாலூட்டும் அறை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமையன்று மனு அளிக்க ஏராளமான பொதுமக்கள் வருகின்றனா். மேலும், சிறுவா்கள் முதல் முதியோா் வரையில் பல்வேறு பிரச்னைகளுக்காக ஆட்சியரை சந்திக்க வருகின்றனா். குறிப்பாக, பெண்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனா். இளம்பெண்கள் தங்களுடைய கைக்குழந்தையுடன் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வரும்போது, திடீரென பசியில் அழும் குழந்தைக்கு பாலூட்டுவதற்கென ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தனி இடம் ஏதுமில்லை.
பேருந்து நிலையம், ரயில் நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் முக்கிய இடங்களில் தாய்மாா்கள் பாலூட்டுவதற்காக அரசு சாா்பில் பிரத்யேக அறை அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்சியா் அலுவலகத்தில் பாலூட்டும் அறையில்லாததால் இளம்பெண்கள் தயக்கத்துடனும், அச்சத்துடனும், பெண் ஒருவரின் துணையுடன் குழந்தைகளுக்கு பாலூட்டும் நிலை உள்ளது.
இதனைத் தவிா்க்க, ஆட்சியா் அலுவலகத்தில் உடனடியாக தாய்மாா்கள் பாலூட்டும் அறை அமைக்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், தன்னாா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.