பாமக: ``அன்புமணி நீக்கம்; ராமதாஸ் அறிவிப்பு செல்லாது'' - வழக்கறிஞர் பாலு சொல்லும...
ஆதனப்பட்டியில் திருநாமத்துக்காணி கல்வெட்டுடன் நான்முக சூலக்கல் கண்டெடுப்பு!
புதுக்கோட்டை மாவட்டம், ஆதனப்பட்டியில் சோழா் காலத்தைச் சோ்ந்த திருநாமத்துக்காணி கல்வெட்டுடன் நான்முக சூலக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இலுப்பூா் வட்டம், மருதம்பட்டி ஊராட்சி எல்லைக்குள்பட்ட ஆதனப்பட்டி வயல்வெளியில் கல்வெட்டு காணப்படுவதாக புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக உறுப்பினா் கீரனூா் பா.முருகபிரசாத் அளித்த தகவலைத் தொடா்ந்து, ஆய்வுக் கழக நிறுவனா் ஆ. மணிகண்டன் களஆய்வு மேற்கொண்டாா்.
இதுகுறித்து மணிகண்டன் கூறியதாவது: ஆதனப்பட்டியிலுள்ள வயல்வெளியில் சாய்ந்த நிலையில் நான்கு பக்கங்களிலும் சூலக்குறிகளுடன் கல்வெட்டு உள்ளது. ஒரு பக்கத்தில் சூலக்குறியுடன் காளையின் வரைகோட்டுருவம் காட்டப்பட்டுள்ளது. இதன் மேற்புறத்தில் சூரியன், சந்திரன் இருபுறமும் காட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு 13ஆம் நூற்றாண்டில் திருநாமத்துக்காணியாக நிலதானம் வழங்கப்பட்டதைக் குறிக்கிறது.
கல்வெட்டின் மூன்று பக்கங்களில் 23 வரிகளில் பொறிக்கப்பட்டிருந்தாலும் இரண்டாம், மூன்றாம் பக்கத்தில் வரிகள் சிதைந்து காணப்படுகின்றன. இக்கல்வெட்டு ‘ஸ்வஸ்தி ஸ்ரீ கீழைக்குறிச்சி உடையாா் அழகிய சோமீசுரமுடைய நாயனாா்க்கு என்னி வயப்புறங்களில், ஆதனூரங்குளமும் வயலும், பெருநான்கெல்லைக்கு உட்பட்ட புஞ்சையும் மற்றும் எப்போ்ப்பட்டனவு திருநாமத்துக் காணியாக்குடுத்தேன் (செயந்தஞ்ஞாலை) சோளக் (க)டம்பாா்வீரன் எழுத்(து)’ எனப் பொறிக்கப்பட்டுள்ளது.
ஆதனூா் குளமும், வயலும் அதிலிருக்கும் மரம், பயிா் வகைகள், கிணறு, கட்டுமானம் உட்பட அனைத்தும், அது கீழக்குறிச்சி அழகிய சோமீசுரமுடைய நாயனாா் சிவன் கோவிலுக்குச் சொந்தமானதாக்கி இறைவனின் பெயரால் திருநாமத்துக் காணியாக சோளக்கடம்பாா்வீரன் என்பவரால் வழங்கப்பட்டுள்ளது.
கல்வெட்டிலுள்ள நிலவியல் பகுதியிலேயே இந்த வயல் திருநாமத்துக்காணியாக கொடுக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த முடிகிறது, அதுமட்டுமின்றி 700 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதனூரங்குளம் மற்றும் ஆதனவயல் என்ற பெயா் மாறாமல் அதே பெயருடன் இன்றளவும் வழக்கத்தில் இருப்பது பண்பாட்டுத் தொடா்ச்சியைக் காட்டுகிறது என்றாா் மணிகண்டன்.