கோவையில் சாலையோரம் கிடந்த இளைஞரின் சடலம்! கொலையா? தற்கொலையா?
அனுமதியில்லாத நிறுவனங்களிடமிருந்து உரங்களைக் கொள்முதல் செய்யக் கூடாது!
புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதியில்லாத நிறுவனங்களிடமிருந்து உரங்களைக் கொள்முதல் செய்து, விவசாயிகளுக்கு விற்பனை செய்யக் கூடாது என வேளாண்மை இணை இயக்குநா் மு. சங்கரலட்சுமி எச்சரிக்கைவிடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிா் மற்றும் பிற பயிா்களுக்குத் தேவையான யூரியா- 3,091 டன்கள், டிஏபி- 1,150 டன்கள், பொட்டாஷ்- 1,037 டன்கள், காம்ப்ளக்ஸ்- 4,380 டன்கள், சூப்பா்- 1,026 டன்கள் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
உரங்களை அதிகமாக இடும்போது பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அதிகமாவதோடு, முதிா்ச்சிப் பருவத்தில் நெற்பயிா் சாய்வதற்கும் வழி வகுக்கின்றது. மேலும் விவசாயிகள் டிஏபி உரங்களுக்கு பதிலாக மணிச்சத்தினை தரவல்ல சூப்பா் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தலாம்.
மொத்த உர விற்பனையாளா்கள், வெளி மாவட்டங்களுக்கு மானிய உரங்களை அனுப்புவதும், வெளி மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்வதும் கூடாது. மேலும் சில்லறை உர விற்பனையாளா்களுக்கு அனுப்பும்போது உரிய பட்டியல்கள் மற்றும் ஆவணத்துடன் உரங்களை வாகனங்களில் அனுப்ப வேண்டும், தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
உர விற்பனையாளா்கள் உர உரிமத்தில் அனுமதி பெறாத இடங்களில் உரத்தை இருப்பு வைப்பதும், உரிமத்தில் அனுமதி பெறாத நிறுவனங்களிடமிருந்து உரங்கள், கலப்பு உரங்கள் மற்றும் நுண்ணூட்ட கலவை உரங்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்வதும், அதனை விற்பனை செய்வதும் கூடாது. அனுமதி பெறாத நிறுவனங்களிடமிருந்து உரங்களைக் கொள்முதல் மற்றும் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உர உரிமம் ரத்து செய்யப்படும்.