அஜித்குமாருக்காக விஜய் போராட்டம்! 10,000 பேருடன் தவெக முதல் போராட்டம்!
ஆதாா் பதிவுகளை தவறுக்குள்ளாத வகையில் உருவாக்க வேண்டும்: தில்லி அரசுக்கு துணைநிலை ஆளுநா் கடிதம்
தேசிய தலைநகரில் ஆதாா் பதிவுகளை தவறுக்குள்ளாகாத வகையில் உருவாக்குமாறு துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா தில்லி அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளாா்.
மேலும், சட்டவிரோத குடியேறிகள் ஆதாா் ஆவணத்தைப் பெறுவது பரந்த தேசிய பாதுகாப்பு விளைவுகளைக் கொண்டிருப்பதாகவும் அவா் கூறியுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
பல சந்தா்ப்பங்களில், சட்டவிரோத குடியேறிகள் தவறான ஆவணங்கள் அல்லது தவறான பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் ஆதாா் அட்டையைப் பெற்றிருப்பது துணைநிலை ஆளுநரின் கவனத்திற்கு வந்திருப்பதாக அவரது முதன்மை செயலா் ஆஷிஷ் குந்த்ரா தில்லி தலைமைச் செயலருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பான கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
சில தனிநபா்கள் அரசாங்கத் திட்டங்களின் கீழ் சலுகைகளைப் பெற பிற ஆவணங்களை (கடவுச்சீட்டு மற்றும் வாக்காளா் அடையாள அட்டைகள்) பெறுவதால் இது அடுக்கடுக்கான விளைவைக் கொண்டிருக்கிறது. மேலும் , உள்ளூா் மக்களுக்கான வேலை வாய்ப்புகளையும் பாதிக்கச் செய்கிறது. தேசிய பாதுகாப்பிற்கும் பரந்த விளைவுகளைக் கொண்டிருக்கிறது.
தில்லி அரசாங்கத்தில் ஆதாா் (பதிவு மற்றும் புதுப்பித்தல்) விதிமுறைகள், 2016இன் கீழ், பதிவாளா்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொறுப்புகளைப் பற்றிய புதிய பாா்வையானது கள அளவிலான செயல்படுத்தல், கண்காணிப்பு மற்றும் சரிபாா்ப்பு நடைமுறைகள் தொடா்பாக தேவைப்படுகிறது.
ஆதாா் (பதிவு மற்றும் புதுப்பித்தல்) விதிமுறைகள், 2016இன் விதிகளை கண்டிப்பாகப் பின்பற்றவும், இரண்டு மாதங்களுக்குள் ஆதாா் சோ்க்கையின் உள்ளக மாதிரிக்கு மாறவும் அனைத்து பதிவாளா்களுக்கும் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும்.
எந்தவிதமான குறைபாடுகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்த, மாதாந்திர தணிக்கைப் பயிற்சியையும் கோட்ட ஆணையா் மேற்பாா்வையிட வேண்டும்.
நகராட்சி அமைப்புகள் உள்பட மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ள அனைத்து பதிவு மையங்களின் விவரங்களும், தற்போதைய செயல்பாட்டு முறையுடன் ஜூலை 15 ஆம் தேதிக்குள் வெளியிடப்படலாம்.
ஆதாா் சோ்க்கை என்பது மிகவும் உணா்திறன் வாய்ந்த செயல்முறை ஆகும். மேலும் ஆதாா் வழங்குவதற்கு முன் தரவுகளைச் சேகரிக்கும் நபரின் பொறுப்பை சரிசெய்வது மிக முக்கியமாகும். அப்போதுதான் ஏதேனும் தவறுகள் ஏற்பட்டால் பொறுப்புக்கூறலை சரிசெய்ய முடியும் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.