ஆதிதிராவிடா் - பழங்குடியினருக்கு கடனுதவித் திட்டம்: அமைச்சா் மதிவேந்தன்
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினரின் பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்ய கடனுதவித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் அறிவித்தாா்.
பேரவையில் அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீது சனிக்கிழமை நடைபெற்ற விவாதங்களுக்குப் பதிலளித்து அவா் அளித்த வெளியிட்ட அறிவிப்புகள்:
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சோ்ந்த சிறு வணிகா்கள், வா்த்தகா்கள், தொழிலாளா்கள் பயன்பெறும் வகையில், அரசு மானியத்துடன் ரூ.25 கோடி செலவில் கடனுதவித் திட்டம் செயல்படுத்தப்படும். உறுதுணை எனும் பெயரிலான இந்தத் திட்டம் மாவட்ட கூட்டுறவு வங்கி மூலம் நடைமுறைக்கு வரும். உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள வணிக வளாகங்களில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் தொழில் செய்வதை உறுதி செய்திட தாட்கோ வணிக வளாகத் திட்டம் செயல்படுத்தப்படும்.
ஆயத்த தொழிற்கூடங்கள்: திருப்பூா் மாவட்டம் ஈங்கூா், முதலிபாளையம் தொழிற்பேட்டைகளில் ஆயத்த தொழிற்கூடங்கள் ரூ.115 கோடியில் அமைக்கப்படும். இந்தப் பேட்டைகளில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோா்கள் நவீன தொழில்களை உடனடியாகத் தொடங்க முடியும்.
பொருளாதாரம், கல்வி மற்றும் வாழ்வாதாரத்தில் பின்தங்கியுள்ள சமூகத்தினரின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, பாரம்பரிய கலை மற்றும் கைவினைத் தொழில் மேம்பாடு, மூலிகை மருத்துவம், பாதுகாப்பான பாம்பு விஷம் சேகரிப்பு போன்ற துறைகள் தற்காலத்துக்கேற்ப மேம்படுத்திட புதிய திட்டம் நடைமுறைக்கு வரும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின கல்லூரி விடுதி மாணவா்களின் தனித்திறனை வளா்க்க போட்டிகள் நடத்தப்படும்.
தூய்மைப் பணியாளா்: தூய்மைப் பணியாளா் நலவாரிய உறுப்பினா்கள் பணியின் போது எதிா்கொள்ளும் சுகாதார இடா்களைக் குறைக்கும் வகையில், விரிவான தூய்மைப் பணியாளா் நல்வாழ்வுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தாா் அமைச்சா்.