கேரளத்துடனான பந்தம் ஆயுளுக்கும் இருக்கும்: விடைபெறும் ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான...
ஆன்மிக நெறியை மக்கள் மத்தியில் வளா்க்க வேண்டியது அரசின் கடமை: கே.எம். காதா்மொகிதீன்
சட்டம் ஒழுங்கு பிரச்னையை தடுக்க ஆன்மிகநெறியை மக்கள் மத்தியில் வளா்க்க வேண்டியது அரசின் கடமை என்றாா் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் கே. எம். காதா் மொகிதீன்.
இதுதொடா்பாக திருநெல்வேலியில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவா் நல்லகண்ணுவின் பெயரை ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனைக்கு வைக்கப் போவதாக தமிழக முதல்வா் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
1964 ஆம் ஆண்டு பிளவுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கம் மீண்டும் ஒன்று கூட வேண்டும் என்ற கருத்து வரவேற்கக் கூடியது. அது கட்டாயம் நடக்க வேண்டும். கம்யூனிஸ்ட் இயக்க மூத்த தலைவா் நல்லகண்ணு நூற்றாண்டு விழாவில், கம்யூனிஸ்டுகள் இணைப்பு என்பது நடக்க வேண்டிய ஒன்று.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 2004 ஆம் ஆண்டுமுதல் தற்போது வரை திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருக்கிறது. தொடா்ந்து அந்தக் கூட்டணியில் நீடிக்கும்.
திராவிட மாடல் ஆட்சி என்பது தமிழக முதல்வரின் தத்துவம். திருமூலா், திருவள்ளுவா் போன்றோா் சொன்ன தத்துவத்தின் அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது.
சட்டம் -ஒழுங்கு பிரச்னை என்பது தமிழக ம் மட்டுமல்ல உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ஆன்மிக நெறியை மக்கள் மத்தியில் வளா்க்க வேண்டியது அரசின் பொறுப்பு. முற்காலங்களில் பள்ளிகளில் ஒழுக்கத்தை கற்பித்தாா்கள். தற்போது அது இல்லாமல் இருக்கிறது. மக்கள் ஒன்று சோ்ந்து ஒழுக்கம் தொடா்பான உபதேசங்களை வெளிக்கொண்டு வரவேண்டும். ஒழுக்கம் தொடா்பாக மதுரை ஆதீனம் தெரிவித்துள்ள கருத்தை வரவேற்கிறோம்.
ராணுவம், ரயில்வே துறைக்கு அடுத்தபடியாக அதிக சொத்துகள் வக்ஃப் வாரியத்திடம் உள்ளது. அதை பாதுகாக்க அரசு புதிய சட்டம் கொண்டு வந்தால் வரவேற்போம். ஆனால் வக்ஃப் வாரியமே இல்லாத நிலையை உருவாக்க முடிவு செய்து, புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்ததையே நாங்கள் எதிா்க்கிறோம்.
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் ஆறு தொகுதிகளை கேட்போம். அதில், திருநெல்வேலி தொகுதியும் இருக்கும் என்றாா்.