ஆன்லைன் விளையாட்டில் பணமிழப்பு: வங்கியைக் கொள்ளையடிக்க முயன்ற மாணவன் கைது!
மத்தியப் பிரதேசத்தில் ஆன்லைன் விளையாட்டில் பணமிழந்த மாணவன் வங்கியைக் கொள்ளையடிக்க முயற்சித்த நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சஞ்சய் குமார் (24). இவர் போபாலில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைத் துறையில் படித்து வருகிறார்.
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையான இவர், தொடர்ந்து நண்பர்களிடம் கடன் பெற்றும் அவரது கல்லூரி கட்டணத்தையும் கட்டி ஆன்லைன் சூதாட்ட கேம்களை விளையாண்டு வந்தார். அவ்வப்போது பணம் ஜெயிக்கும் இவர் இதுவரை ரூ. 2 லட்சம் வரை இழந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், மனவிரக்தியடைந்த சஞ்சய் கல்லூரி கட்டணத்தைக் கட்டுவதற்கு வங்கி ஒன்றைக் கொள்ளையடிக்க திட்டமிட்டு அதுதொடர்பான யூடியூப் விடியோக்களை பார்த்து வந்தார். மேலும், குற்றச் சம்பவத்தை எந்தத் தடயமுமின்றி செய்வது எப்படியென்று பார்த்து அதற்கு தனியே மிளகாய் ஸ்பிரே ஒன்றை வாங்கி வைத்தார்.
இதையும் படிக்க | தில்லியில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் கொட்டப்படும் குப்பைகள்: ஓவைசி குற்றச்சாட்டு!
கொள்ளையடிப்பதற்கு ஏற்றவாறு காவலாளி இல்லாத வங்கியைத் தேடிய சஞ்சய், பிப்லானி பகுதியிலுள்ள தனலட்சுமி வங்கிக்கு மாஸ்க், ஹெல்மெட் அணிந்து சென்று வங்கிக் கணக்கு திறப்பதற்கான விவரங்களை நேற்று (ஜன. 3) கேட்டுவிட்டுச் சென்றார். பின்னர், மீண்டும் 4 மணிக்கு அதே வங்கிக்கு 4 மணியளவில் சென்று வாசலுக்கு அருகிலிருந்த வங்கி ஊழியர் முகத்தில் மிளகாய் ஸ்பிரேவை அடித்தார்.
மற்றொரு ஊழியர் முகத்திலும் ஸ்பிரே அடித்த சஞ்சயை கேஷ் கவுண்டர் அருகே சென்றபோது மற்ற வங்கி ஊழியர்கள் எழுந்து பிடிக்க முயற்சித்தனர். இதனைத் தொடந்து, பயத்தில் வங்கியை விட்டு வெளியே வந்த சஞ்சய் உடனடியாகத் தனது பைக்கை எடுத்துக்கொண்டு தப்பித்துச் சென்றார்.
இந்த நிலையில், வங்கி ஊழியர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் சில மணி நேரத்தில் கல்லூரி மாணவரான சஞ்சய் கைது செய்யப்பட்டார். வங்கியின் சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் அவரை விரைந்து பிடித்தனர்.
இதையும் படிக்க | டேட்டிங் செயலிகள் மூலம் 700 -க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய நபர் கைது!
கைது செய்யப்பட்ட போது மாணவன் சஞ்சயிடம் இருந்து ஒரு பிஸ்டல் துப்பாக்கியும், மிளகாய் ஸ்பிரேயும் கைப்பற்றப்பட்டன.
மேலும் வேறு ஏதேனும் குற்றச் சம்பவங்களில் மாணவன் சஞ்சய் ஈடுபட்டாரா என்று அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அனைவராலும் நகைப்புக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.