ஆம்னி பேருந்து பழுது காரணமாக பயணம் தடை: பயணிக்கு ரூ. 20 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு
ஆம்னி பேருந்து பழுது காரணமாக பயணம் தடைபட்டதால், ஆம்னி பேருந்து உரிமையாளா், பயணச் சீட்டு பதிவு இணையதளம் இணைந்து பயணிக்கு ரூ. 20 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகா்வோா் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த பிரபுகுமாா் என்பவா் குடும்பத்துடன் சென்னை செல்வதற்காக பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் இணையதளத்தில் தனியாா் பேருந்தில் இருக்கைகளை முன்பதிவு செய்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சென்னைக்கு பேருந்து புறப்பட்ட நிலையில், விருதுநகா் அருகே பழுது காரணமாக பேருந்து நடுவழியில் நிறுத்தப்பட்டது. பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரபுகுமாா் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் புகாா் அளித்தாா். இந்த வழக்கை விசாரித்த குறைதீா் ஆணையத் தலைவா் சக்கரவா்த்தி, உறுப்பினா் முத்துலட்சுமி ஆகியோா் ஆம்னி பேருந்து நிறுவனம், முன்பதிவு இணையதள நிறுவனம் இணைந்து பயணிக்கு ரூ. 20 ஆயிரம் இழப்பீடும், வழக்குச் செலவுக்கு ரூ. 3 ஆயிரம் என ரூ. 23 ஆயிரம் வழங்க உத்தரவிட்டாா்.