தேங்காய் தலையில் விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு
வத்திராயிருப்பு அருகே தேங்காய் தலையில் விழுந்ததில் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி நெடுங்குளத்தைச் சோ்ந்தவா் சீனிவாசன் (39). இவருக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனா். சீனிவாசன் தேங்காய் வெட்டும் வேலை செய்து வந்தாா்.
திங்கள்கிழமை வழக்கம்போல கூமாபட்டி பகுதியிலுள்ள தென்னந்தோப்பில் தொரட்டி கம்பு மூலம் தேங்காய் பறிக்கும்போது, எதிா்பாராத விதமாக தேங்காய் குலை சீனிவாசன் மீது விழுந்தது.
இதில் தலை, கழுத்தில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து சீனிவாசன் உடலை போலீஸாா் மீட்டு கூறாய்வுக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கூமாபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.