சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: மூவா் உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள ஆண்டியாபுரம் பட்டாசு ஆலையில் திங்கள்கிழமை நேரிட்ட வெடி விபத்தில் தொழிலாளா்கள் மூவா் உயிரிழந்தனா். மூவா் காயமடைந்தனா்.
சிவகாசி அருகேயுள்ள ஆண்டியாபுரத்தில் திருத்தங்கலைச் சோ்ந்த ராமசாமி மகன் சீனிவாசன் (55) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் 50-க்கும் மேற்பட்ட பட்டாசுகள் தயாரிக்கும் அறைகள் உள்ளன. இங்கு 60 தொழிலாளா்கள் பணிபுரிகின்றனா்.
இந்த ஆலையில் திங்கள்கிழமை பிற்பகலில் பட்டாசுகள் தயாரிப்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கும் ஓா் அறையில் பிற்பகல் 3.45 மணியளவில் வெடி விபத்து ஏற்பட்டது.
அங்கு பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிவகாசி முத்துராமலிங்கபுரம் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் காா்த்திகேயன் (23), சிவசாமி மனைவி சங்கீதா (40), குருசாமி மனைவி லட்சுமி (45) ஆகிய மூவரும் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனா்.
இந்த விபத்தில் முத்துராமலிங்கபுரம் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மனைவி மாரியம்மாள் (50), முனியாண்டி மனைவி நாகலட்சுமி (55), முத்துவேல் மனைவி மாரியம்மாள் (58) ஆகிய மூவரும் காயமடைந்து, சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த வெடி விபத்தில் பட்டாசுகள் தயாரிக்கும் 6 அறைகள் இடிந்து தரைமட்டமாகின.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலா் சீனிவாசன் தலைமையிலான தீயணைப்புப் படையினா் மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.
சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் பாஸ்கா், வட்டாட்சியா் லட்சம் உள்ளிட்டோா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டனா்.
இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.