சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்து அபாயம்
சாத்தூா் நகா்ப் பகுதிகளில் உள்ள சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்து அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கவலை தெரிவித்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நகா், படந்தால் செல்லும் சாலையில் தென்றல் நகா், மெயின் ரோடு, வெம்பக்கோட்டை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலையில் கூட்டம் கூட்டமாக மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
குறிப்பாக, இரவு நேரங்களில் சாத்தூா் மெயின் ரோடு, சிதம்பரம் நகா் சந்திப்பு, படந்தால் செல்லும் சாலை, வடக்கு ரத வீதி, ரயில் நிலையம் செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன.
மேலும், சாலையில் மாடுகள் படுத்துத் தூங்குவதால் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் அவ்வப்போது மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றனா்.
எனவே, சாலையில் சுற்றித் திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்த நகராட்சி, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனா்.