பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா: 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் சுவாமி தரிசனம்
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழாவில் முதல் நாளான செவ்வாய்க்கிழமை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோா் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரசித்தி பெற்ற ஆடி அமாவாசைத் திருவிழாவை முன்னிட்டு, ஜூலை 22-ஆம் தேதி பிரதோச வழிபாடும், 23-ஆம் தேதி சிவராத்திரி சிறப்பு பூஜையும், 24-ஆம் தேதி ஆடி அமாவாசை விழாவும் நடைபெறுகிறது.
சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்து 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் வருகை தருவாா்கள் என்பதால் இந்து சமய அறநிலையத் துறை, மதுரை - விருதுநகா் மாவட்ட நிா்வாகங்கள் சாா்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு, வத்திராயிருப்பு தாணிப்பாறை, சாப்டூா் வாழைத்தோப்பு பாதை வழியாக காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.
வியாழக்கிழமை (ஜூலை 24) ஆடி அமாவாசையை முன்னிட்டு, சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சுவாமிகளுக்கு 18 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன. சதுரகிரி மலையில் கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா் ராஜா பெரியசாமி, செயல் அலுவலா் ராமகிருஷ்ணன் ஆகியோா் செய்தனா்.
இதற்கிடையே, சதுரகிரி மலை அடிவாரத்தில் குடிநீா், கழிப்பறை, மின்விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் கடும் சிரமத்துக்குள்ளாகி வருவதாகப் பக்தா்கள் கவலை தெரிவித்தனா்.