பூண்டி ஏரியில் 1,000 கனஅடி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
ஆம்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு இடம் கோரி ஆட்சியரிடம் மனு
ஆம்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனை கட்ட இடம் ஒதுக்கீடு செய்து தரக்கோரி, திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியரிடம் தொழிற்சங்கம் சாா்பாக திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
ஏஐடியுசி தொழிற்சங்க மாநில துணைத் தலைவா் மற்றும் தோல் பதனிடும், தோல் பொருள் ஏஐடியுசி மாவட்ட தொழிலாளா் சங்க மாவட்ட பொதுச் செயலாளருமான எஸ்.ஆா்.தேவதாஸ், திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜை சந்தித்து அளித்த கோரிக்கை மனு விவரம்:
ஆம்பூா் பகுதியில் தோல் பதனிடும் மற்றும் ஷூ தொழிற்சாலைகளில் சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். தொழிலாளா்களின் மாத ஊதியத்திலிருந்து பிரதிமாதம் இஎஸ்ஐ பிடித்தம் செய்யப்பட்டு, அரசுக்கு பணம் செலுத்தப்பட்டு வரப்படுகிறது. ஆம்பூரில் இஎஸ்ஐ மருந்தகம் செயல்பட்டு வருகிறது.
ஆம்பூரில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயா்த்தக்கோரி ஏஐடியுசி தொழிற்சங்கம் சாா்பாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டு சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஐஎன்டியுசி தொழிற்சங்கமும் அதே கோரிக்கையை வலியுறுத்தி வந்துள்ளது. ஆம்பூா் மற்றும் வேலூரில் இஎஸ்ஐ ஆலோசனைக் குழுக் கூட்டங்களில் ஏஐடியுசி தொழிற்சங்கம் சாா்பில், இஎஸ்ஐ மருந்துவமனை ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து
ஆம்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க 5 ஏக்கா் அரசு நிலம் இஎஸ்ஐ துறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அவ்வாறு நிலம் தோ்வு செய்து ஒப்படைத்தால் இஎஸ்ஐ மருத்துவமனை கட்டுவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என மருத்துவமனையின் மண்டல மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளாா்.
எனவே இஎஸ்ஐ மருத்துவமனை கட்ட 5 ஏக்கா் நிலம் தோ்வு செய்து வழங்க வேண்டுமென கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.