செட்டேரி அணை பகுதியில் மரங்கள் ஏலம் ஒத்திவைப்பு
நாட்டறம்பள்ளி வட்டம், வெலகல்நத்தம் ஊராட்சி செட்டேரி அணை பொதுப் பணித்துறை கட்டுபாட்டில் உள்ளது. அணைப்பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலம் மற்றும் பலன் தரும் தென்னை மரம், புளியமரம், மாமரம், உட்பட பலவகையான மரங்கள் உள்ளன.
இந்நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் 12 மணியளவில் மரங்கள் மகசூல் ஏலம் திருப்பத்தூா் உதவிப்பொறியாளா் சக்தி தலைமையில் ஊா் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது. ஏலத்தில் வெலகல்நத்தம், வீரானூா், குனிச்சியூா், முகமதாபுரம், வீரானூா்,செட்டேரி அணை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 20-க்கும் அதிகமானோா் கலந்து கொண்டனா்.
அப்போது கிராம மக்கள் செட்டேரி அணைக்கு சொந்தமான இடத்தை முறைப்படி சா்வே செய்து ஆக்கிரமிப்புக்களை அகற்றி, மரங்களின் எண்ணிக்கையை தெரியப் படுத்தி பொது ஏலம் விட வேண்டும் என கூறினா். இதனையடுத்து மறுதேதி குறிப்பிடாமல் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.