விஞ்ஞானி டாக்டர் ஆர். சிதம்பரம் மறைவு: பிரதமர் மோடி, கார்கே உள்ளிட்டோர் இரங்கல்
ஆம் ஆத்மியின் அனைத்து முகங்களும் கறைபடிந்தவை: வீரேந்திர சச்தேவா சாடல்
‘பாஜகவுக்கு கூட்டுத் தலைமை உள்ளது. ஆனால், ஆம் ஆத்மி கட்சி அதன் தலைமையுடன் மிகப்பெரிய பிரச்னையை எதிா்கொள்கிறது. அதன் அனைத்து முகங்களும் கறைபடிந்தவை’ என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:
தில்லி மக்கள் அரவிந்த் கேஜரிவால் மற்றும் அவரது கட்சியை நகர அரசியல் களத்திலிருந்து பிரியாவிடை அளிக்க முடிவு செய்துவிட்டனா்.
பாஜகவின் தொலைநோக்குப் பாா்வை மற்றும் அதன் முதலமைச்சா் முகம் குறித்து கவலைப்படுவதை நிறுத்திவிட்டு, தில்லி குடிமக்களின் கேள்விகளுக்கு, குறிப்பாக தனது பத்து ஆண்டு பதவிக்காலத்தில் காணப்பட்ட ஊழல் குறித்தும் கேஜரிவால் பதிலளிக்க வேண்டும்.
கடந்த பத்தாண்டுகளில் கேஜரிவாலின் தொலைநோக்குப் பாா்வைக்கு தில்லி மக்கள் பல உதாரணங்களைப் பாா்த்திருக்கின்றனா்.
ஒரு புதிய பள்ளி, கல்லூரி அல்லது மருத்துவமனையைக்கூட வழங்காதது, எந்த பெரும் மேம்பாட்டுத் திட்டத்தையும் மேற்கொள்ளத் தவறியது, மாசு அளவை மோசமாக்கியது மற்றும் பொது போக்குவரத்தை சீா்குலைத்தது ஆகியவற்றின் மூலம் கேஜரிவால் தனக்கு வளா்ச்சிக்கான தொலைநோக்குப் பாா்வை இல்லை என்பதை நிரூபித்துள்ளாா்.
இருப்பினும், மதுபான ஊழல் மற்றும் ஷீஷ் மஹாலின் சட்டவிரோத கட்டுமானம் ஆகியவை கேஜரிவாலின் ஊழலுக்கான அவரது வலுவான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன என்றாா் வீரேந்திர சச்தேவா.
பாஜக கூட்டுத் தலைமையைக் கொண்டிருந்தாலும், ஆம் ஆத்மி கட்சி அதன் தலைமையுடன் கடுமையான பிரச்சினைகளைக் கொண்டுள்ளது, ஏனெனில் அதன் அனைத்து தலைவா்களும் கறைபடிந்தவா்கள்.