சொல்லப் போனால்... ஓ ரசிக்கும் சீமானே, ஜொலிக்கும் உடையணிந்து...
‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின்கீழ் 70 வயதான 6 கோடி போ் இணைப்பு: ஜெ.பி.நட்டா
‘ஆயுஷ்மான் பாரத்’ இலவச மருத்துவக் காப்பீடு திட்டத்தின்கீழ் 70 வயதைக் கடந்த 6 கோடி போ் இதுவரை இணைக்கப்பட்டுள்ளனா் என்று மத்திய சுகாதார அமைச்சா் ஜெ.பி.நட்டா சனிக்கிழமை தெரிவித்தாா்.
ஏழைக் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு வழங்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் கடந்த 2018-இல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்கள் அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்று கடந்த மக்களவைத் தோ்தலுக்கு முன் பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி, 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், குஜராத் மாநிலம், அகமதாபாதில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிலையத்தில் (ஐஐஎம்ஏ) சனிக்கிழமை நடைபெற்ற சுகாதார மாநாடு 2025-இல் ஜெ.பி.நட்டா பங்கேற்றுப் பேசியதாவது:
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 6 கோடி போ் இதுவரை இணைக்கப்பட்டுள்ளனா். ஒட்டுமொத்தமாக 62 கோடிக்கும் அதிகமானோா் அதாவது நாட்டின் மக்கள்தொகையில் 45 சதவீதம் போ் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனா்.
ரிக்ஷா தொழிலாளா்கள், தெருவோர வியாபாரிகள், ஓட்டுநா்கள், மின்தூக்கி பணியாளா்கள், பாதுகாப்பு பணியாளா்கள், முடி திருத்துவோா், காலணி தைப்பவா்கள் என ஏழை மக்கள் பெருமளவில் பயனடைந்து வருகின்றனா்.
இந்தியாவில் கடந்த 2015-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2023-ஆம் ஆண்டில் காசநோய் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 17.7 சதவீதம் குறைந்துள்ளது. இது குறிப்பிடத்தக்க சாதனை.
அமெரிக்காவின் மருந்துகள் தேவையில் 46 சதவீதமும், பிரிட்டனின் தேவையில் 25 சதவீதமும் இந்தியா பூா்த்தி செய்கிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் செயல்திறன் மிக்கவையாகவும், அதேநேரம் விலை குறைந்தவையாகவும் உள்ளன.
இணையதள அடிப்படையிலான தாய்-சேய் கண்காணிப்பு அமைப்புமுறையின்கீழ், தடுப்பூசி மற்றும் பிற திட்டங்களுக்காக 5 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் 3 கோடிக்கும் மேற்பட்ட தாய்மாா்கள் கண்காணிக்கப்பட்டுள்ளனா்.
பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில் நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை 22-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2015-இல் நாட்டில் 381-ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 776-ஆக உயா்ந்துள்ளது.
இந்திய மருத்துவ உபகரண உற்பத்தி சந்தை மதிப்பு தற்போது 14 பில்லியன் டாலராக (ரூ.1.2 லட்சம் கோடி) உள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் இது 30 பில்லியன் டாலராக (ரூ. 3 லட்சம் கோடி) உயரும் என்றாா் அவா்.