ஆரணியாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பிச்சாட்டூரில் அமைந்துள்ள ஆரணியாறு நீர்தேக்கத்திலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட உள்ளதால் கரையோர கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு- ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பிச்சாட்டூர் கிராமத்தில் ஆரணியாறு நீர்தேக்கம் அமைந்துள்ளது. தற்போதைய நிலையில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த நீர்த்தேக்கத்தில் முழுக் கொள்ளளவு (+281.00 அடி) ஆகும். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நீர்த்தேக்கத்தின் தற்போதைய நிலையில் (+277.10) அடியாக உயர்ந்து வருகிறது.
தற்போதைய நிலையில் ஃபென்ஜால் எனும் புயல் புதுச்சேரி மற்றும் மரக்காணம் இடையே கரையைக் கடந்த நிலையில் பிச்சாட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்தும் சற்று அதிகமாக உள்ளது. அதனால் நீர்தேக்கத்தின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கையாக ஆந்திர மாநில அரசு காலை 10 மணிக்கு முதல் கட்டமாக 500 கனஅடி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதனால், ஆரணியாறு ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
எனவே மேற்குறிப்பிட்ட உபரிநீரை ஆரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டுக்கள், தடுப்பணைகள் மூலம் தேக்கப்பட்டு ஏரிகளுக்கு நீர்வரத்து கால்வாய் மூலம் பாசனத்திற்காக நீர் சேகரித்தும் அனுப்பப்படுகிறது. நீர் தேக்கத்திற்கு மழை நீரினால் வரத்து அதிகமாகும் பட்சத்தில் மிகை நீர் வெளியேற்றத்தின் அளவு படிப்படியாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஆரணியாற்றின் குறுக்கே உள்ள அ.நா.குப்பம் அணைக்கட்டு, லட்சுமிபுரம் அணைக்கட்டு, அ.ரெட்டிப்பாளையம் தடுப்பணைகள் மூலமாக சராசரியாக 3200 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.
சேலத்தில் கனமழை: வாகனங்களின்றி வெறிச்சோடிய சாலைகள்!
அதனால் ஆரணி ஆற்றின் கரையோர கிராமங்களான ஊத்துக்கோட்டை, தாராட்சி, பேரண்டூர், பனப்பாக்கம், பாலவாக்கம், காக்கவாக்கம், செங்காத்தாகுளம், பெரியபாளையம், ராளப்பாடி, மங்களம், காரணி, ஆரணி, போந்தவாக்கம், புதுவாயல், துரைநல்லூர், வைரவன்குப்பம், மேல்முதலம்பேடு, கீழ்முதலம்பேடு, பெருவாயல், ஏலியம்பேடு பெரியகாவனம், சின்னகாவனம், பொன்னேரி, லட்சுமிபுரம், கம்மவார்பாளையம், பெரும்பேடு, வஞ்சிவாக்கம், வெள்ளோடை, ஆலாடு, கொளத்தூர், குமாரசிறுலப்பாக்கம், மனோபுரம், அத்தமணஞ்சேரி, வேலூர், அ.ரெட்டிப்பாளையம், காட்டூர், தத்தமஞ்சி, கடப்பாக்கம், சிறுபழவேற்காடு, போலாட்சியம்மன்குளம், ஆண்டார்மடம், தாங்கல்பெரும்புலம் மற்றும் ஆரணி ஆற்றின் இருபுறமும்உள்ள தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும் படி அவர் தெரிவித்துள்ளார்.