நிகழ்ச்சியில் டிக்டாக் நிறுவனத்தின் ஈடுபாட்டிற்கு உய்குர் சமூகம் கண்டனம்!
ஆறு ஆண்டுகளாக நிரப்பப்படாத மக்களவைத் துணைத் தலைவர் பதவி!
18-ஆவது மக்களவை தொடங்கி 9 மாதங்கள் ஆகியும், இதுவரை அவையின் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க மத்திய அரசு எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருக்கிறது.
17-ஆவது மக்களவை முழுவதும் துணைத் தலைவர் பதவி நிரப்பப்படாமலே நிறைவடைந்த நிலையில், 6 ஆண்டுகளாக அப்பதவி காலியாக உள்ளது.
2024 மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கூடியது. அப்போது, எதிர்க்கட்சிகள் மக்களவை துணைத் தலைவர் பதவி கோரியதை பாஜக ஏற்காததால், மக்களவைத் தலைவரை ஒருமனதாக தேர்ந்தெடுக்க எதிர்க்கட்சிகள் மறுப்பு தெரிவித்தன.
இதன்விளைவாக, முதல்முறையாக மக்களவைத் தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது. எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக காங்கிரஸ் மூத்த எம்பி கே. சுரேஷ் போட்டியிட்டார். முடிவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாஜக உறுப்பினர் ஓம் பிர்லா, இரண்டாவது முறையாக மக்களவைத் தலைவரானார்.
இதையும் படிக்க : சலவைத் தொழிலும் 'உற்பத்தி செயல்பாட்டின்' கீழ் வரும்: உச்ச நீதிமன்றம்
துணைத் தலைவர் பதவி நிரப்பப்படாதது ஏன்?
இந்தியாவில் பல ஆண்டுகளாக மக்களவை துணைத் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு கொடுப்பதை மரபாக பின்பற்றி வருகின்றனர்.
முதல்முதலாக 1956 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு ஆட்சியின்போது, எதிர்க்கட்சியான சிரோமணி அகாலிதளத்தைச் சேர்ந்த சர்தார் ஹுகும் சிங் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன்பிறகு சில ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களே மக்களவைத் துணைத் தலைவர் பதவியை வகித்தாலும், பின்னர் மீண்டும் எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. வாஜ்பாயிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை காங்கிரஸ் வழங்கியது.
இறுதியாக 16-வது மக்களவையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் தம்பிதுரை துணைத் தலைவராக இருந்தார்.
அதன்பிறகு, 17-வது மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுவதற்கு போதிய இடங்களில் காங்கிரஸ் வெல்லாததால் அப்பதவி இறுதிவரை 5 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்தது.
தற்போது, 18-வது மக்களவைத் தேர்தலில் பாஜக 240 இடங்களில், காங்கிரஸ் 99 இடங்களிலும் அதிகபட்சமாக வென்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து பாஜக ஆட்சி அமைத்தது. எதிர்க்கட்சிகளுக்கு 232 உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், மரபுப்படி மக்களவைத் துணைத் தலைவர் பதவி காங்கிரஸுக்கு அளிக்க வேண்டும் என்பதால் 9 மாதங்கள் ஆகியும் அப்பதவியை நிரப்பாமல் பாஜக தாமதப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன.
அரசியலமைப்பு 93-ஆவது பிரிவு கூறுவதென்ன?
இந்திய அரசியலமைப்பு 93-ஆவது பிரிவில், புதிய அரசு அமைந்தவுடன் மக்களவைத் தலைவரும் துணைத் தலைவரும் ’முடிந்தவரை விரைவில்’ தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.
மேலும், மக்களவை தலைவர் அல்லது துணைத் தலைவர் பதவி காலியாகும்போது, உடனடியாக அவையின் மற்ற உறுப்பினர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் பிரிவு 95(1) இல், சட்டப்பேரவைத் தலைவர் பதவி காலியாக இருந்தால், அந்த கடமைகளை துணைத் தலைவர் செய்வார் என்றும், பிரிவு 95(2) இல், பேரவையில் தலைவர் இல்லாத சூழலில், முடிவெடுக்கக் கூடிய இடத்தில் துணைத் தலைவர் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஓம் பிர்லா இல்லையெனில் வழிநடத்துபவர் யார்?
மக்களவைத் துணைத் தலைவர் பதவி காலியாக இருக்கும் நிலையில், அவையில் தலைவர் இல்லாதபோது வழிநடத்துவதற்கான குழுவை ஓம் பிர்லா நியமித்துள்ளார்.
அந்த குழுவில், பாஜகவின் ஜகதம்பிகா பால், பி.சி. மோகன் , சந்தியா ரே, திலீப் சைகியா, காங்கிரஸின் குமாரி செல்ஜா, திமுகவின் ஆ. ராசா, திரிணமூல் காங்கிரஸின் ககோலி கோஷ் தஸ்திதர், தெலுங்கு தேசம் கட்சியின் கிருஷ்ண பிரசாத் தென்னதி மற்றும் சமாஜவாதியின் அவதேஷ் பிரசாத் ஆகியோர் உள்ளனர்.
அவைத் தலைவர் ஓம் பிர்லா இல்லாதபோது, இவர்களில் ஒருவர் தலைமையேற்று நடத்தி வருகிறார்கள்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில், துணைத் தலைவர் விவகாரத்தை எழுப்ப எதிர்க்கட்சியினர் ஆயத்தமாகி வருகின்றனர்.