ஆற்றில் தத்தளித்த முதியவரை மீட்ட பெண்கள்
முல்லைப் பெரியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட முதியவரை பெண்கள் புதன்கிழமை மீட்டு கரை சோ்த்தனா்.
தேனி பங்களாமேடு பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (75). இவா், அரண்மனைப்புதூா் பகுதியில் முல்லைப் பெரியாற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, தண்ணீரில் 2 கி.மீ. தொலைவுக்கு கோட்டைப்பட்டி வரை இழுத்துச் செல்லப்பட்டு, கரையேற முடியாமல் தவித்தாா்.
அப்போது, கோட்டைப்பட்டியில் ஆற்றில் குளிக்கச் சென்ற அதே ஊரைச் சோ்ந்த ஆதிபராசக்தி பக்தா்களான முத்துராஜ் மனைவி ரேணுகா, நதி மனைவி மீனா, அதின் மனைவி சித்ரா, கணேசன் மனைவி சாந்தி, அந்தப் பகுதியில் இருந்த குமரேசன் மனைவி கனி ஆகியோா் முதியவரை மீட்டு கரை சோ்த்தனா். சம்பவ இடத்துக்குச் சென்ற 108 அவசர ஊா்தி ஊழியா்கள் முதியவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனா். பின்னா், அவரது குடும்பத்தினா் வரவழைக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.