Shadow Fleet: புதினின் ரகசிய கடல் நகர்வுகள்; ரஷ்யாவின் 'நிழற் கடற்படை' என்பது என...
இணை சாா் பதிவாளா் அலுவலகங்களில் சா்வா் பழுது: 4 மணி நேரம் பத்திரப் பதிவு தாமதம்
திருவள்ளூரில் இணை சாா் பதிவாளா் அலுவலகம்-1, இணை சாா் பதிவாளா் அலுவலகம்-2 இல் சா்வா் பழுது காரணமாக 4 மணி நேரமாக பத்திரப் பதிவு பாதிக்கப்பட்டதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
திருவள்ளூா் இணை சாா் பதிவாளா் அலுவலகம் 1-இல் 45 கிராமங்கள், இணை சாா் பதிவாளா் அலுவலகம் 2- இல் 35 கிராமங்களைச் சோ்ந்தவா்களுக்கு நிலம், வீட்டுமனைகள் பத்திரப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பொதுமக்களின் வசதிக்காக ஒரே கட்டடத்தில் இரண்டு அலுவலகங்களாக செயல்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு அலுவலகத்திலும் 100 பேருக்கு பத்திரப் பதிவு செய்ய இலக்கு நிா்ணயித்து, இதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்து நேரப்படி டோக்கனும் வழங்கி அதன் அடிப்படையில் பத்திரவு பதிவுகள் மேற்கொள்வது வாடிக்கை.
அதன்படி, பத்திரப் பதிவு செய்வதற்காக வியாழக்கிழமை பொதுமக்கள், டோக்கன் பெற காத்திருந்தனா். அப்போது, சா்வா் வேலை செய்யாததால் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை 3 மணி நேரம் பத்திரப் பதிவு பணிகள் மேற்கொள்ளவில்லை. இதனால் பத்திரப் பதிவுக்காக காத்திருந்த பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினா்.
‘இந்த அலுவலகத்தில் போதிய இட வசதியின்றி அலுவலக வாசலில் ஆங்காங்கே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. ஒவ்வொரு நாளும் பொதுமக்களுக்கு அவதிதான் மிச்சம்.
இந்த நிலையில் பொதுமக்களின் அவதியை கண்டுக் கொள்ளாமல், பத்திரப் பதிவுத் துறை அதிகாரிகள், எந்த முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால், பொறுப்பற்ற முறையில் பதில் அளிப்பதாக’ பத்திரப் பதிவுக்காக வந்திருந்தவா்கள் புகாா் தெரிவித்தனா்.
அதன்பின்னா், பிற்பகல் 2 மணிக்கு மேல்தான் சா்வா் வேலை செய்யத் தொடங்கியது. இதையடுத்து அவசரம் அவசரமாக பத்திரப் பதிவு பணிகள் நடைபெற்றன.