'இது கட்சியா... ரியல் எஸ்டேட் கம்பெனியா...' - உள்கட்சி தேர்தலால் கொதிக்கும் கோவை பாஜக
2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக, கோவையில் பா.ஜ.க சார்பில் பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றபோது, பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, பொள்ளாச்சி பா.ஜ.க வேட்பாளராக நின்ற வசந்தராஜனை மோடியின் அருகில் நிற்க வைப்பார். அதே வசந்தராஜனுக்கு எதிராக தற்போது பா.ஜ.க கோவை தெற்கு மாவட்டத்தில் போர் கொடி எழுப்பியுள்ளனர்.
வசந்தராஜன் பா.ஜ.க கோவை தெற்கு மாவட்ட தலைவராக இருந்தார். உள்கட்சி தேர்தலில் மீண்டும் மாவட்ட தலைவராகிவிட வேண்டும் என்று அவர் காய் நகர்த்தினார். அது நடக்காத காரணத்தால், அவரின் ரியல் எஸ்டேட் பார்ட்னரை மாவட்டத் தலைவராக்கியுள்ளார் என்று பா.ஜ.கவினர் போஸ்டர் ஒட்டியும், பதவிகளை ராஜினாமா செய்தும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.
நம்மிடம் பேசிய பா.ஜ.க மூத்த நிர்வாகி நடராஜன், “உள்கட்சி தேர்தலில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. கிளைத் தலைவர் தேர்தலில் மூன்றில் ஒரு பங்கு இருந்தால், மண்டல் தேர்தல் நடத்திக் கொள்ளலாம். அந்த வகையில் மொத்தமுள்ள சுமார் 1,000 கிளைகளில் சுமார் 300 கிளைகளில் தேர்தல் நடைபெற்றன. அதேபோல, 21 மண்டல்களில் 11 மண்டல்களில்தான் தேர்தல் நடைபெற்றுள்ளது. மற்ற இடங்களில் வசந்தராஜன் தேர்தல் நடத்த விடவில்லை. இந்த மண்டல் தலைவர்கள்தான் மாவட்ட தலைவரை தேர்ந்தெடுப்பார்கள். வசந்தராஜன் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வேலுமணியின் உறவினர். தொழிலும் அவர்களால் ஆதாயம் அடைவார். அதனால், அ.தி.மு.க வெற்றி பெறுவதற்காக முயற்சித்து வருகிறார்கள்.
நாச்சிப்பாளையத்தைச் சேர்ந்த அப்பு என்பவர்தான் மாவட்ட தலைவர் பதவிக்கு தகுதியானர். அவரை விட்டு மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆதரவால், வசந்தராஜனின் பினாமி சந்திரசேகர் என்பவரை மாவட்ட தலைவராக நியமித்துள்ளனர். படையப்பா படம் வசனத்தை போல, 'மாப்பிள்ளை இவர் தான். ஆனால் இவர் போட்டுள்ள சட்டை என்னுடையது' என்பது மாதிரி, சந்திரசேகர் பெயரளவுக்குதான் மாவட்ட தலைவர். வசந்தராஜன் தான் மாவட்ட தலைவருக்கான அதிகாரத்துடன் வலம் வருவார். கட்சிக்காக நீண்ட ஆண்டுகளாக உழைத்தவர்களை புறக்கணித்துவிட்டு, புதிததாக வந்தவர்களை முன்னிலை படுத்துகிறார்கள். இந்த தேர்தலுக்காக மட்டும் வசந்தராஜன் ரூ.20 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார்” என்றார்.
கோவை தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுசாமி, “ஆனைமலை தெற்கு ஒன்றியத்தில் எதிர்ப்புகள் அதிகம் இருந்த ராஜ்கணேஷ் என்பவரை தலைவராக்கியுள்ளனர். பல பகுதிகளில் இதுபோலத்தான் நடந்துள்ளன. கட்சியில் ஜனநாயகம் இல்லை. மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் புகாரளித்தோம். அவரும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இப்போது அண்ணாமலை, 'சிலர் போவார்கள்... சிலர் வருவார்கள்' என்று எங்களை உதாசீனப்படுத்தும் வகையில் பேசுகிறார். இதே நிலை தொடர்ந்தால் பலரும் போய்விடுவார்கள். சிலர் மட்டுமே இருப்பார்கள். நானும் கட்சியில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவில்தான் இருக்கிறேன்.
வசந்தராஜன் ஏற்கெனவே 2 முறை மாவட்ட தலைவராக இருந்துவிட்டார். கட்சி விதிகள் படி ஒருவர் 2 முறைக்கு மேல் மாவட்ட தலைவராக இருக்க முடியாது. விதியை மீறி வசந்தராஜன் இந்த முறையும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அதற்கு எதிர்ப்பு வலுத்ததும் தன்னுடைய பார்ட்னர் சந்திரசேகரை மாவட்ட தலைவராக்கியுள்ளார். அவரின் பவுன்சர்களாக வலம் வருபவர்களுக்குத்தான் மண்டல் தலைவர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து கேள்வி எழுப்புவோர் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்” என்றார்.
இந்தப் புகார்கள் குறித்து வசந்தராஜனிடம் விளக்கம் கேட்டபோது, “நான் 4.5 ஆண்டுகள்தான் தலைவர் பதவியில் இருந்தேன். விதிகள்படி 6 ஆண்டுகள் வரை இருக்க முடியும். அதனால் போட்டியிட்டேன். தலைவர் பதவியில் போட்டியிட்டவர்களில் சந்திரசேகர்தான் தகுதியானவர். அவர் கட்சிக்காக சிறை வாசம் அனுபவித்தவர். மதுக்கரை ஒன்றியத்தில் 10,000 உறுப்பினர்களை கட்சியில் இணைத்துள்ளார். அவரது பணிகளை அண்ணாமலையே பாராட்டியுள்ளார். பணம், சாதி ஆகியவற்றை தவிர்த்துவிட்டு எளிய பின்னணியில் இருந்து வந்த ஒருவரை மாவட்ட தலைவராக்கியுள்ளனர். இங்கு யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரலாம் என்பதற்கு உதாரணமாக உள்ளோம்.
நான் தி.மு.க, அ.தி.மு.க காரர்களை ஆதரித்தால்தான் தவறு. சொந்தக் கட்சி நிர்வாகியை ஆதரிப்பதில் என்ன தவறு? பா.ஜ.கவில் உள்ள நிர்வாகிகள் இணைந்து ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார்கள். அதில் சந்திரசேகரும் உள்ளார். அந்த நிறுவனம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு என்னை சிறப்பு விருந்தினர்களாக அழைத்தனர். அவ்வளவுதான். ஒருவேளை அதில் பார்ட்னராக இருந்தாலும் என்ன தவறு. கட்சிதான் என் குடும்பம். அவர்கள் வளர்ச்சிக்கு நான் உதவியாக இருக்கிறேன். எனக்கு ஏராளமான தொழில்கள் இருக்கின்றன. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதியில் அ.தி.மு.கவுக்கு இணையாக வாக்கு வாங்கியுள்ளேன். அந்தளவுக்கு கட்சிக்காக கடினமாக உழைக்கிறோம். பலரும் இதை ஆதரிக்கிறார்கள். குறிப்பிட்ட சிலர் மட்டுமே பதவி கிடைக்காத உள்நோக்கத்தில் எதிர்க்கிறார்கள்” என்கிறார்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs