`இது கொண்டாட்டத்திற்கு உகந்த நேரமல்ல'- 'தக் லைஃப்' படத்தின் இசை வெளியீட்டு விழா தள்ளிவைப்பு
இந்தியா - பாகிஸ்தான் இடையே தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இப்படியான நிலையில் ஐ.பி.எல். போட்டிகள் தொடர்ந்து நடைபெறுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
ஐ.பி.எல். தொடர் தொடர்ந்து நடத்தப்படுமா என்பது குறித்து இன்று முடிவெடுக்கப்படும் என பி.சி.சி.ஐ. துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

மேலும், மணி ரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் 'தக் லைஃப்' திரைப்படம் அடுத்த மாதம் 5-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகிற மே 16-ஆம் தேதி நடத்துவதற்கு படக்குழு திட்டமிட்டிருந்தது.
ஆனால், தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு இசை வெளியீட்டு விழாவை வேறு தேதிக்கு தள்ளிவைப்பதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து விளக்கம் வெளியிட்டிருக்கும் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம், "நம் நாட்டின் எல்லையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும், தற்போதைய எச்சரிக்கை நிலையையும் கருத்தில் கொண்டு, மே 16-ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த 'தக் லைஃப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளோம்.
நம் தாய்நாட்டைப் பாதுகாக்க எல்லைகளில் அசைக்க முடியாத துணிவுடன் நிற்கும் நம் வீரர்களின் தியாகத்திற்கு முன்னால், இது கொண்டாட்டத்திற்கு உகந்த நேரமல்ல, மாறாக அமைதியான ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டிய தருணம் என நாங்கள் நம்புகிறோம்.

புதிய தேதி பின்னர், பொருத்தமான நேரத்தில் அறிவிக்கப்படும். இந்த நேரத்தில், நம் நாட்டைப் பாதுகாக்க எச்சரிக்கையுடன் நிற்கும் நம் ஆயுதப் படைகளின் வீர ஆண்களும் பெண்களும் நம் எண்ணங்களில் உள்ளனர்.
குடிமக்களாக, நாம் பொறுமையுடனும் ஒற்றுமையுடனும் பதிலளிக்க வேண்டியது நம் கடமை." எனக் குறிப்பிட்டுள்ளனர்.