இத்தாலி டு சுவிஸ் ஒரு ஜில் கார் பயணம்! - அனுபவப் பகிர்வு |My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
பலமுறை சுவிசின் சூரிக் (Zurich) சென்றாலும், ஒவ்வொரு முறை அனுபவமும் வேறு வேறாகவே இருக்கும். அரபு நாடுகள் வழியாகவே பெரும்பாலும் சென்று வந்ததால்,
இம்முறை தலைநகர் டெல்லி சென்று, பின்னர் இத்தாலியின் ‘மிலான்’ சென்று அங்கிருந்து காரில் சூரிக் செல்ல ஏற்பாடாயிற்று. அதற்கு இரண்டு காரணங்கள்.
முதலாவது புது வழியில் செல்வது; இரண்டாவது நமது ‘ஏர் இந்தியா’ விமானங்களில் பயணிப்பது!

காலை எட்டு மணிக்கு ‘ப்ளைட்’ என்பதால் வீட்டை விட்டு நான்கரை மணிக்கே கிளம்பினோம். நமது நாட்டில் பிரம்ம முகூர்த்தம் (4.30-6.00) விசேஷமானது அல்லவா?
இந்தக் கோடையில் அந்த நேரத்தில்கூட வியர்க்கவே செய்தது!சாலையெங்கும் ஆடோமாடிக் சிக்னல்கள் வேலை செய்தாலும், நமது ஓட்டுனர்கள் யாருமே அதனை ஒரு பொருட்டாகவே மதிக்காதது வருத்தம் அளிப்பதாகவே உள்ளது.
இவ்வளவுக்கும் அந்த அதிகாலை, சுறுசுறுப்பான நேரம்!மிட் நைட் 12ஓ 2 ஓ அல்ல. சிசிடிவிக்கள் மூலம் சட்டத்தை மதிக்காதோருக்கு அட்லீஸ்ட் ஃபைனாவது விதிக்கலாமே. மாதத்தில் இரண்டொரு நாட்கள் செய்தால்கூடப் போதுமானது.
சட்டத்தை மதித்து யாராவது நிறுத்தினால் அடித்துத் தூக்கி விட்டுப் போய்விடுவார்கள் போலும். தனி மனித ஒழுக்கம் இல்லாத எந்த நாடும் முன்னேறுவது கடினமே. நமக்குப் பயமுறுத்தும் போலீஸ் தேவைப்படுகிறதோ?
ஒரு வழியாக ஏர்போர்ட் வந்து டெல்லி விமானத்தில் ஏறி சரியான நேரத்திற்கு டெல்லியை அடைந்தோம்!அன்று கிருத்திகை என்பதால் விரதம்! 42 வருட விரதத்தை எந்தச் சந்தர்ப்பத்திலும் நாங்கள் மீறுவதில்லை. சூரியன் மறையும் வரை திரவ உணவு மட்டுமே.

சுமார் 2 மணி நேர இடை வெளிக்குப் பிறகு மிலான் விமானத்தில் ஏறினோம்.முன்னதாக இமிக்ரேஷன் சடங்குகளை முடித்துக் கொண்டோம்.அதுவும் ஏர் இந்தியா விமானமே! ஆனால் பெரியது.
ஏறத்தாழ 10 மணி நேரப் பயணம். அடிக்கடி திரவ உணவையும்,லஞ்ச்,டின்னரையும் கொடுத்து மிக நன்றாகவே கவனித்துக் கொண்டார்கள் பணிப்பெண்களும் பணியிலிருந்த ஆண்களும்.
வயதானவர்களிடம் அதிகப் பரிவுடன் நடந்து கொண்டது மனதுக்கு இதமளித்தது. சென்னை - டெல்லி விமானத்தில் விக்னேஷ் என்ற இளைஞர் நாங்கள் டிபன் சாப்பிடாததால், அவராகவே ஜூஸ் கொண்டு வந்து கொடுத்து கவனித்துக் கொண்டார்.
விமானம் மேலே ஏறி 40 ஆயிரம் அடிக்கு மேலே பறக்க,சீட்டுக்கு எதிரே இருந்த டிவி ஸ்க்ரீனில் எல்லோரும் விரல்களை வைத்து அழுத்தி,அழுத்தி ஓய்ந்து போனார்கள். ஒரு சில டிவி தவிர பெரும்பாலானவை அசைய மறுத்து விட்டன. எனது துணைவியாரின் டிவி ஒர்க் செய்ய தமிழில் ‘ப்ளாக் அன்ட் ஒயிட்’ படம் பார்க்க ஆரம்பித்தார்கள். எனக்கோ…நித்திராதேவி எப்பொழுதுமே கருணை காட்டுவாள்!

குறிப்பிட்ட நேரத்தில் ப்ளைட் இத்தாலி மண்ணைத் தொட,மணியைப் பார்த்தால் மிலானின் டைம் 7.30 முன்னிரவு. ஆனால் சூரியன் அப்பொழுதும் மறையாமல் இருந்தார்.
இங்கு இருட்டு 9.00 மணிக்கு மேல்தான் மெல்லப்படர ஆரம்பிக்கிறது. விமானத்திலிருந்து இறங்கி ஃபார்மாலிடிசை நிறைவு செய்து கொண்டு வெளியே வந்து பேக்கஜுக்காகக் காத்து நின்றோம்.
எங்களுடன் பயணம் செய்தவர்களின் பெட்டிகள் வரிசையாக வர,அவர்களும் சென்று விட,எங்களைப்போல் ஐந்தாறு பேர் மட்டுமே சுற்றி வரும் கன்வேயர் பெல்டில் கண் பதித்தபடி காத்து நின்றோம்.சென்னையிலேயே எங்கள் பெட்டிகளை வைத்து விட்டதாலோ என்னவோ லக்கேஜுகள் மூன்றும் இறுதியாகத்தான் வந்து சேர்ந்தன!
எனது சன் முன்னதாகவே வந்து காத்திருக்க, காரில் லக்கேஜ்களை ஏற்றிக் கொண்டு, பயணத்தைத் தொடர்ந்தோம். ஏறத்தாழ 280 கி.மீ., தூரத்தை இரண்டரை மணி நேரத்தில் கடந்தோம்.
நடுவில் பல சிக்னல்கள் இருந்தாலும், இரவிலும் அனைத்து சிக்னல்களையும் மதித்து நடக்கும் ஓட்டுனர்களின் ஒழுக்கத்தைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
பல, மலைகளைக் குடைந்த குகைப் பாதைகள்! மின் விளக்கில், அவற்றின் உள்ளே பகல் போலக் காட்சி அளிக்கின்றன.அவற்றின் உள்ளேயும் 100-120 கி.மீ.,வேக சிக்னல்கள்!ஒரு குகைப் பாதையின் நீளம் 17 கி.மீ., வீடு வந்து உறங்கச் சென்றோம்.

அடுத்த நாள் முழு ஓய்வு எடுக்க,அதற்கடுத்த நாளில் ‘மே தினக் கொண்டாட்டங்கள்’ களை கட்டின. அருகிலுள்ள பள்ளி வளாகத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். இங்கு நடைபெறும் அனைத்து விழாக்களுமே உடல் வளத்தை அடிப்படையாகக் கொண்டவையே!
உலக உழைப்பாளர் தினத்தை எவ்விதம் கொண்டாடுவார்கள் என்று சொல்லவா வேண்டும்? எல்லோருக்கும் ஓட்டப் பந்தயந்தான்! சிறுவர்களுக்கு சுமார் ஒரு கிலோ மீட்டர்!அதிலும் இரண்டு பிரிவுகள்!
பெரியவர்களுக்கு 5 மற்றும் 10 கி.மீ., மாரத்தான் பிரிவுகள்.பெயர் கொடுத்த அனைவருக்கும் பெயர்,நம்பர் போட்ட, மார்பில் கட்டும் பெரிய ஐடி அட்டைகள்.வயதானவர்களை முன்பே ஓட விடுகிறார்கள்.பங்கேற்று ஓட்டத்தை முடிக்கும் சிறுவர்கள் அனைவருக்கும் பதக்கங்கள்!
ஜூஸ் மற்றும் மதியச் சாப்பாடு! கூட வருபவர்கள் உணவருந்த ஏதுவாக பல திடீர் உணவகங்கள். அவ்வாறு வாங்கப்படும் உணவுகளுக்கு மட்டுமே கட்டணம். பந்தயங்களில் பங்கேற்பவர்களுக்கு அனைத்தும் ப்ரீ!
நாங்களும் அங்கு சென்று அனைத்தையும் கண்டு களித்தோம். மகன் 10 கி.மீ.,மாரத்தானிலும், மருமகள் 5 கி.மீ.,குழுவிலும், பேரன், பேத்தி கிட்ஸ் குழுவிலும் பங்கேற்றனர்.

இங்கு எல்லா நிகழ்ச்சிகளிலுமே குடும்பத்துடன் பங்கேற்பதை அனைவருமே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
நம் வீடுகளில் இருந்தே கூட இயற்கையை ரசிக்கலாம்!
மேலும் சொல்கிறேன்!
-ரெ.ஆத்மநாதன்,
சூரிக்,சுவிட்சர்லாந்து
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.