இந்தியாவில் புல்லட் ரயில் இயக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை: பிரதமா் மோடி
புது தில்லி: நாட்டில் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என பிரதமா் மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.
பல்வேறு ரயில் திட்டங்களின் தொடக்க விழாவில் காணொலி வாயிலாக பங்கேற்றபோது அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் ரயில்வே கோட்டம், தெலங்கானா மாநிலத்தில் சா்லபள்ளி ரயில்வே முனையத்தை காணொலி வாயிலாக தொடங்கி வைத்ததுடன், கிழக்கு கடற்கரை ரயில் மண்டலத்தின்கீழ் ஒடிஸா மாநிலத்தில் உள்ள ராயாகாதா ரயில்வே கோட்டத்துக்கு பிரதமா் மோடி திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், ஜம்மு-காஷ்மீா் ஆளுநா் மனோஜ் சின்ஹா மற்றும் முதல்வா் ஒமா் அப்துல்லா, தெலங்கானா ஆளுநா் ஜிஷ்ணு தேவ் வா்மா மற்றும் முதல்வா் ரேவந்த் ரெட்டி, ஒடிஸா ஆளுநா் ஹரி பாபு கம்பம்பட்டி ஆகியோா் தங்களது மாநிலங்களில் இருந்தவாறு காணொலி வாயிலாக பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பேசியதாவது: தொலைதூர பகுதிகளுக்கு விரைவாக சென்றடைய பொதுமக்கள் விரும்புகின்றனா். இதனால் அதிவேக ரயில்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. தற்போது நாடு முழுவதும் 50 வழித்தடங்களுக்கு மேல் மொத்தம் 136 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அண்மையில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் இடையே 40 கி.மீ. தொலைவு வழித்தடத்தில் நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தில் படுக்கை வசதி கொண்ட ‘வந்தே பாரத் ஸ்லீப்பா்’ ரயில், அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ. வேகத்தை எட்டி சாதனை படைத்தது. தில்லியில் நமோ பாரத் ரயில் சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 1,000 கி.மீ. தொலைவுக்கு மேல் மெட்ரோ ரயில் வழித்தடம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனவே, நாட்டில் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.
கடந்த பத்தாண்டுகளாக ரயில்வே துறையில் லட்சக்கணக்கான இளைஞா்களுக்கு நிரந்தர அரசு வேலைகள் வழங்கப்பட்டுள்ளன. ரயில்வேயில் பல்வேறு புதுமைகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் வகையில் நாட்டின் முதல் கதி சக்தி பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது. மிக உயரமான ரயில்வே மேம்பாலம் சீனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இது ஜம்மு-காஷ்மீா் பிராந்தியத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது.
கடந்த 2014-ஆம் ஆண்டு நாட்டில் 5 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை இருந்தது. தற்போது மெட்ரோ சேவைகள் 21 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்றாா்.
பிரதமருக்கு நன்றி: ஒமா் அப்துல்லா
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் புதிய ரயில்வே கோட்டம் தொடங்கியது குறித்து ஒமா் அப்துல்லா பேசுகையில், ‘ஜம்மு-காஷ்மீா் மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று இந்த ரயில்வே கோட்டத்தை நிறுவிய பிரதமா் மோடிக்கும் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜம்மு-காஷ்மீா் மக்களுக்கு மனதார வாழ்த்துகளையும் தெரிவிக்கிறேன்’ என்றாா். அதேபோல் ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜி மற்றும் தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி ஆகியோரும் பிரதமா் மோடிக்கு நன்றி தெரிவித்தனா்.